Published : 28 Nov 2021 01:51 PM
Last Updated : 28 Nov 2021 01:51 PM
ராசிபுரம் அருகே தள்ளாடும் வயதிலும் தளராமல் கிணற்றில் குதித்து நீந்தி சாகசம் காட்டி வருகிறார் 75 வயது மூதாட்டி பாப்பம்மாள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (75). தங்கசாலை பகுதியில் வசித்து வரும் இவர், சிறு வயது முதலே கிணற்றில் குதித்து நீச்சல் அடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
இதனால் சிறுமியாக இருந்த போது, நண்பர்களுடன் இணைந்து அடிக்கடி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் நீச்சல் அடித்து குளித்து மகிழும் பழக்கம் கொண்டவர். ஆனால் திருமணத்திற்கு பிறகு சுற்று வட்டார பகுதி கிணறுகளில் நீர் வற்றிப்போனதால்,நீச்சல் பழக்கம் குறைந்து போனது. இந்நிலையில் தற்போது வெண்ணந்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக சுற்று வட்டார கிணறுகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது.
இதனால் பாப்பம்மாள் அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து கிணறுகளில் நீச்சல் அடித்து குதூகலித்து வருகிறார். மேலும் நீச்சல் தெரியாத சிறுவர், சிறுமிகளுக்கும் நீச்சல் கலை கற்றுத்தருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் ஏராளமான சிறுவர்கள் மூதாட்டியிடம் நீச்சல் கலை கற்று வருகின்றனர்.
இது குறித்து, பாப்பம்மாள் கூறுகையில், சிறுமியாக இருந்தபோது, தன்னுடைய தந்தையிடம் அனைத்துவகை நீச்சலும் தான் கற்றுக் கொண்டதாகவும், இந்த கலையை இங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இளைஞர்களுக்கு நீச்சல் அடிக்க கற்று கொடுத்து வருவதாகவும்,முன்பு போல் அதிகமாக கற்றுத்தர முடியவில்லை என்றாலும் இந்த வயதில் என்னால் முடிந்தவரை இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் நீச்சல் கற்று தந்து வருகின்றேன்.
என்னுடைய மகள்,மகன் பேரன்,பேத்தி,கொள்ளுப் பேரன் என அனைவருக்கும் கற்றுக் கொடுத்ததை பார்த்த இந்த பகுதிவாழ் மக்கள் தங்களுக்கு இந்த கலையை கற்றுக் கொடுக்க வற்புறுத்தியதால் தற்போது இந்தக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறேன். நீச்சல் கலை என்பது அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த வயதிலும் அனைவருக்கும் நீச்சல் கற்றுத் தருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதுகுறித்து அந்த பகுதி இளைஞர்கள், கூறுகையில் நாங்கள் நீச்சல் அடிக்க கற்றுக் கொண்டதே இந்த பாட்டி மூலமாகத்தான் இவ்வளவு வயது ஆனபோதிலும் நீச்சல் கலை மறக்காமல் உயரத்திலிருந்து குதித்து எங்களுக்கு குளிரையும் பொருட்படுத்தாமல் நீச்சல் பழகிய தருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT