Published : 27 Nov 2021 07:34 PM
Last Updated : 27 Nov 2021 07:34 PM
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து வெடித்த விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் படுகாயடைந்தனர்.
புதுச்சேரி வசந்தம் நகரில் வசித்து வருபவர் சுரேஷ். உழவர்கரை மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளராக உள்ளார். இவருக்குச் சொந்தமான 3 மாடி வீடு முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது. வீட்டின் கீழ் தளம், முதல் தளம், இரண்டாம் என 3 தளத்திலும் தலா 4 குடியிருப்புகள் உள்ளன. வீட்டின் முன்புறம் சுரேஷ் பாஜக அலுவலகம் நடத்தி வருகிறார். அதே தளத்தில் சுரேஷின் உறவினரான எழிலரசி (42), அவரது மகள் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீநிதி (12) ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் பக்கத்து வீட்டில் எழிலரசியின் தாய் ஜோதி (60) வசித்து வருகிறார். மற்ற தளங்கள் வாடகைக்கு விடப்பட்டு அங்கும் சிலர் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இந்நிலையில் எழிலரசியின் தாயார் ஜோதி இன்று (நவ.27) காலை தூங்கி எழுந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது எழிலரசியின் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதில் அவரது வீடு, அருகிலிருந்த தாயார் ஜோதியின் வீடு இடிந்து விழுந்தது. வீட்டின் முன்புறம் இருந்த பாஜக அலுவலகத்தின் ஷட்டர் பெயர்ந்து அப்பகுதியில் உள்ள சந்தில் விழுந்து கிடந்தது. எழிலரசியின் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் உள்ளிட்டவை தீயில் கருகின.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த எழிலரசி, அவரது மகள் ஸ்ரீநிதி, அவரது தாயார் ஜோதி ஆகியோரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றித் தகவல் அறிந்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வீடு முற்றிலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. இதனால் தீயணைப்புத் துறையினர் ஏணி மூலம் மேலே சென்று முதல் தளத்தில் சிக்கி இருந்த மேலும் 6 பேரை மீட்டனர். தொடர்ந்து விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீஸார் சோதனை நடத்தினர். நீண்ட நேரம் போலீஸார் நடத்திய விசாரணையில் எழிலரசியின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
எழிலரசி வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரைச் சரியாக மூடாமல் சென்றுள்ளார். இதனால், எரிவாயு சிலிண்டரிலிருந்து கேஸ் கசிந்து அறை முழுவதும் நிரம்பியது. இன்று காலை எழுந்து வந்த எழிலரசி மின் விளக்கைப் போட்டபோது திடீரென எரிவாயு தீப்பிடித்து எரிந்து வெடித்துச் சிதறியது தெரியவந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.
இருப்பினும் வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில் எழிலரசி அதிகம் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாய் ஜோதி, எழிலரசியின் மகள் ஸ்ரீநிதி ஆகியோரும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த வீடு முழுவதும் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதால் வீட்டினுள்ளும், அருகிலும் யாரும் செல்லாத வகையில் முத்தியால்பேட்டை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT