Published : 27 Nov 2021 12:38 PM
Last Updated : 27 Nov 2021 12:38 PM
நீட் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (நவ.27) நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்தார்.
இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு (மசோதா)’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை (மசோதா) உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை முதல்வர் இன்று (27.11.2021) நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT