Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM
இன்றும் கனமழை நீடிக்கும் என்பதால் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம்மீண்டும் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்றுமிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
அடுத்த சில தினங்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 27-ம்தேதி (இன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
29-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை,விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 27 செ.மீ., திருச்செந்தூரில் 25 செ.மீ., நாகப்பட்டினத்தில் 19 செ.மீ.,வைகுண்டத்தில் 18 செ.மீ., குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ., வைப்பாரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
58 செ.மீ. மழை பதிவு
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.26-ம் தேதி வரை வழக்கமாக 34 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 70 சதவீதம் அதிகம். இதேகாலகட்டத்தில் சென்னையில் வழக்கமாக 59 செ.மீ. மழை பதிவாகும். இந்த ஆண்டு 98 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 67 சதவீதம் அதிகம். வெள்ளிக்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவுகளின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சராசரியாக பெய்த மழை அளவு 4 செ.மீ. ஆகும்.எனவே, இந்த ஆண்டு அதிக மழைபெய்த நாளாக இது உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக் கடல் பகுதியில் நிலவும்வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 27-ம் தேதி குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும்தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 29-ம் தேதி புதிய குறைந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக 29, 30-ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2 நாட்களாக பல்வேறுமாவட்டங்களில் மிக கனமழைபெய்துள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால், கடலோர மாவட்டங்கள் அனைத்துக்கும் மீண்டும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தொடர் மழையால் தூத்துக்குடி மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளைச் சுற்றி 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் 2-வது நாளாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும்மாவட்ட நீதிமன்றக் கட்டிடங்களிலும் மழைநீர் புகுந்தது.
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
திருநெல்வேலி மாவட்ட அணைகளின் பாதுகாப்பு கருதி,தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் இரவில் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு பிறகுமழை குறைந்ததால் ஆற்றில்தண்ணீர் திறப்பு 11 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரபகுதி மக்களுக்கு வெள்ள அபாயஎச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாமிரபரணி வெள்ளத்தால் தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் தாமிரபரணி, பரளியாறு, வள்ளியாறு, பழையாறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பேரிடர்மேலாண்மைத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT