Published : 10 Mar 2016 08:05 AM
Last Updated : 10 Mar 2016 08:05 AM

திமுக விளம்பரங்கள் மக்களிடம் எடுபடாது: நடிகர் செந்தில் நம்பிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம் பாக்கம் மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகளுக்கு அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் செந்தில். இந்தத் தேர்தல் குறித்து ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:

அதிமுக ஆட்சியின் 5 ஆண்டு சாதனை களில் முக்கியமாதாக எதை கருதுகிறீர்கள்?

அம்மா சொன்னதை எல்லாம் செய்திருக்கிறார். சொல்லாததையும் செய்திருக்கிறார். ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் என ஏழைகளுக்கு தேவையானதை செய்திருக்கிறார். தொழிலாளிகளுக்கு 20 ரூபாயில் ஒருநாள் சாப்பாடு பிரச்சினை தீர்ந்துவிட்டது. முன்பெல்லாம் பணக்காரங்க வீட்டில் மட்டும்தான் லேப்-டாப் இருக்கும். இப்போது குடிசை வீட்டில் இருப்பவர்கள் கையிலும் லேப்-டாப் இருக்கிறது.

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதுதான் இப்போது முக்கிய செய்தியாக இருக்கிறது. திமுக தலைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறாரே?

நாக்கை துறுத்துவதையும் அடிப்பதை யும் மட்டுமே திறமையாகக் கொண்டுள்ள விஜயகாந்த், ஆட்சிக்கு வந்தால் மக்களையும் அடிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த பழக்கத்தை எல்லாம் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். விஜயகாந்த் ஏன் இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை என்றால், யார் அதிகமாக சூட்கேஸ் கொடுப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு உறுதி என்று கருணாநிதி வாக்குறுதி அளித்திருப்பது மக்களை கவனிக்க வைத்துள்ளதே?

கருணாநிதி ஆட்சியில் டிவி கொடுத்தார்கள். எதற்காக கொடுத்தார்கள் என்பது எல்லாருக்குமே தெரியும். அதில் குடும்ப பலன்தான் முக்கிய நோக்கம். அவர்தான் மதுக்கடையை திறந்தார். இப்போது மூடவேண்டும் என்கிறார். அவரைப் பொறுத்தவரை எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும், வீட்டில் இருப்பவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயணம் குறித்து?

அந்தக் காலத்தில் இருந்தே அவங்களுக்கு ‘நமக்கு நாமே’தான். பூச்சி மருந்து கொள்ளை, ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாமே ‘நமக்கு நாமே’தான்.

பாமகவும் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்கிறதே?

நான்தான் முதல்வர் என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் நீங்கதான் முதல்வர் என்று மக்கள் சொல்ல வேண்டுமே. அவர்கள் எல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் முதல்வராக இருக்க முடியும். தமிழகத்துக்கு முதல்வர் அம்மாதான் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

மக்கள் நலக் கூட்டணி...?

(சிரித்துக்கொண்டே) மக்கள் நலக் கூட்டணியைப் பற்றி மக்களுக்கு தெரியும். அவங்களே பேசிட்டு இருப்பாங்க.

மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளதே?

காங்கிரஸ் எப்போதோ செத்துவிட்டது. ராஜீவ் காந்தி இருக்கும் வரைதான் காங்கிரஸ். குஷ்பு, நக்மா எல்லாம் இருந்தால் எப்படி உருப்புடுவது? ஊழல் பண்ணிவிட்டு மறுபடியும் கூட்டணி அமைக்கிறார்கள் என்றால், மறுபடியும் சுரண்டப் போகிறார்கள் என்றுதானே அர்த்தம். மக்கள் ஏமாற மாட்டார்கள்.

சென்னை வெள்ள நிவாரணம் குறித்து திமுக அழுத்தமாக பேசி வருகிறதே?

மழையை வைத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். மழை என்பது இயற்கை. அதை நாம் ஒன்றும் பண்ண முடியாது. அம்மா அவரது கடமையை சரியாகச் செய்தார். மக்கள் யாராவது இப்போது மழையைப் பற்றி பேசுகிறார்களா?

‘என்னம்மா இப்படி பண்றீங்க ளேம்மா..’ன்னு திமுக புதிய டிசைனில் விளம்பரம் செய்வது எந்த அளவுக்கு மக்களிடம் ரீச் ஆகும் என நினைக்கிறீர்கள்?

எதிர்காற்று அடிக்கும்போது எச்சில் துப்புறாங்க, அது அவங்க முகத்தில்தான் விழும். அந்த விளம்பரம் எல்லாம் மக்களிடையே எடுபடாது. எல்லாருமே அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்வார்கள். நாங்கள்தான் எல்லாவற்றையும் செய்துவிட்டோமே அப்புறம் எதற்கு கத்த வேண்டும். மக்களுக்கு உண்மை தெரியும். அம்மாதான் மீண்டும் முதல்வர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x