Last Updated : 26 Nov, 2021 08:25 PM

1  

Published : 26 Nov 2021 08:25 PM
Last Updated : 26 Nov 2021 08:25 PM

என்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்; பழிவாங்கும் நோக்கத்தோடு முதல்வர் செயல்படுகிறார்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை

பழிவாங்கும் நோக்கத்தோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கோவையில் இன்று (26-ம் தேதி ) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளோம். அதனால், கோவையில் 10 தொகுதிகளிலும் அதிமுக வென்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் ஆட்சிக்கு வந்தவுடன், வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருக்குமான அரசாக செயல்படுவேன் என அறிவித்தார்.

ஆனால், அவ்வாறு செயல்படவில்லை. கோவை மாநகரில் 300 இடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிக்கான ஒப்பந்தங்களை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. முதல்வர் சமீபத்தில் கோவைக்கு வந்த போது, ரத்து செய்யப்பட்ட 300 சாலைகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், உத்தரவிடவில்லை. மாநகரில் சாலைகள் சீரமைக்கப்படாததால், பொதுமக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணி

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும் கூட, கடந்த அதிமுக அரசு மீதும், முன்னாள் அமைச்சர்களான எங்கள் மீதும் முதல்வர் குற்றம் சாட்டுகிறார். முன்பு, சென்னையில் 3,200 இடங்களில் மழைநீர் தேங்கியது. நாங்கள் மேற்கொண்ட சீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 67 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்குகிறது. சென்னை தி.நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள் மேற்கொண்ட இடங்களில் கடந்த முறை அதிகமான மழை வந்த போதும் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால், தற்போது முறையாக தூர்வாராததால் மழைநீர் அங்கு உட்பட பல்வேறு இடங்களில் தேங்குகிறது. அதிமுக ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை தொடங்குவோம். நடப்பாண்டு தற்போதைய அரசு மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ளவில்லை. இதுவும் சென்னையில் மழைநீர் தேங்க முக்கிய காரணமாகும்.

ஸ்மார்்ட்சிட்டி திட்டத்தில், சென்னையில் நகரின் குறிப்பிட்ட பகுதியை மேம்படுத்தும் திட்டத்திற்குட்பட்ட பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான அதிகாரிகள் தான் தேர்வு செய்துள்ளனர். இந்தச் சூழலில் எதற்கெடுத்தாலும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை மையப்படுத்தி முந்தைய அரசையும், என் மீதும் முதல்வர் குறை கூறுகிறார். கடந்த அதிமுக ஆட்சி நிலைத்து நிற்கவும், கோவையில் 10 தொகுதிகளை அதிமுக வெல்வதற்கும் நான் முக்கிய காரணம் என்பதால், என் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு முதல்வர் செயல்படுகிறார். என் மீது வழக்கு போட்டனர். என் வீடு, எனது சகோதரர்கள், தெரிந்தவர்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். என் வீட்டில் சோதனை நடத்திய போது போலீஸார் உடல் நலம் குன்றிய என் தாயாரையும், என் மகளையும் தொல்லைபடுத்தினர். ​என் மீது போடப்படும் வழக்குகளை, நான் சட்டப்படி எதிர்கொள்ள தயார்.

என்னை கைது செய்ய உத்தரவு

தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளதால், நான் வெளியே இருக்கக்கூடாது, என் மீது ஏதாவது ஒரு வழக்கை பதிவு செய்து கைது செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழக முதல்வர் கோவையை புறக்கணிக்கக்கூடாது. கோவை மாநகரில் நிறுத்தி வைக்கப்பட்ட 300 சாலை திட்டப்பணிகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிடாவிட்டால், இதைக் கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x