Published : 26 Nov 2021 01:04 PM
Last Updated : 26 Nov 2021 01:04 PM

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி காலமானார்: ஓபிஎஸ்- ஈபிஎஸ், டிடிவி தினகரன் இரங்கல் 

சென்னை

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய ஒரு சிறுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக இருந்தவர் லீலாவதி.

எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். லீலாவதியின் மரணம் அதிகமுகவினரிடையேயும் எம்ஜிஆர் விசுவாசிகளிடையேயும் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

லீலாவதியின் மறைவு குறித்து அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டாக வெளியிட்ட இரங்கல் அறிக்கை:

''எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மகள் லீலாவதி அம்மையார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணா துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

எம்ஜிஆர் 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய சிறுநீரகத்தை அளித்து, எம்ஜிஆரை வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்.ஜி.ஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.

லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்''.

இவ்வாறு அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் இரங்கல்:

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் இன்று வெளியிட்ட இரங்கல் பதிவில், ''எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித் தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது தன்னுடைய சிறுநீரகத்தை அவருக்கு அளித்த பெருமைக்குரிய லீலாவதியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x