Published : 26 Nov 2021 10:50 AM
Last Updated : 26 Nov 2021 10:50 AM

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி திருப்பூர் பின்னலாடைத் தொழிலை காப்பாற்றுங்கள்: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி திருப்பூர் பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்றுங்கள் எனக் கோரி மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

திருப்பூர் பின்னலாடைத் தொழில் மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளது. நவம்பர் 1, 2021 அன்று நூல் விலை கிலோவுக்கு ரூ 50 உயர்ந்து இருப்பது நெருக்கடியை மிக சிக்கலாக்கி உள்ளது.

உள்நாட்டுச் சந்தைக்கும், ஏற்றுமதிக்குமான உற்பத்தியில் ஈடுபட்டு வருகிற குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை இது உருவாக்கியுள்ளது.

திருப்பூரில் 4 லட்சம் தொழிலகங்கள் உள்ளன. 4 லட்சம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது. ஆகவே தொழில் நெருக்கடி சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து பிழைப்பிற்காக வந்திருக்கிற தொழிலாளர்களின் வாழ்வுரிமை அபாயத்தில் இருக்கிறது.

நூல் விலை கடந்த 13 மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ 10 அல்லது ரூ 15 என உயர்ந்து வந்தது. கடைசி அடி போல நவம்பர் 1 இல் செய்யப்பட்ட ரூ 50 உயர்வு அமைந்திருக்கிறது. எல்லா வகையான நூல்களும் விலை உயர்வை சந்தித்துள்ளன.

ஏற்கெனவே பின்னலாடை தொழில் பல சவால்களை சந்தித்து இருக்கிற நேரம் இது. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, சந்தை சுருக்கம், கோவிட் ஊரடங்கு ஆகியன உதாரணங்கள். மேலும் கொள்கலன், போக்குவரத்து கட்டணம் ஆகியனவும் உயர்ந்துள்ளன. 20 அடி கொள்கலன் அளவிலான போக்குவரத்து கட்டணம் ரூ 3000 லிருந்து 12000 டாலர் வரையிலும், 40 அடி கொள்கலன் அளவுக்கு 17000 டாலர் வரையிலும் அமெரிக்காவால் உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற ரசாயன உட் பொருள் விலைகளும் கடந்த 3 மாதங்களில் 40% முதல் 50 % வரை உயர்ந்துள்ளன. ஆகவே நூல் விலை உயர்வு அடி மேல் விழுந்துள்ள அடியாகும்.

பஞ்சு விலை உயர்வே நூல் விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் அது உண்மை அல்ல. இரண்டு விலைகளுக்குமான விகிதம் பெரும் இடைவெளி கொண்டதாக உள்ளது. திருப்பூர் தொழிலகங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள 5.63 லட்சம் விசைத் தறி, 1.89 லட்சம் கைத்தறிகளும் பாதிப்பிற்கு ஆளாகின்றன. விவசாயத்திற்கு அடுத்தாற்போல் அதிக வேலை உருவாக்கம் செய்கிற துறை இந்த துறையாகும்.

ஆகவே ஜவுளி தொழிற் சங்கிலியை சந்தையின் கோரப் பிடிக்குள் அரசு விட்டு விடுவது அல்லது பெரும் தொழிலகங்கள் வசம் இத்தொழில் விட்டு விடப்படுவது சரியல்ல.

ஆகவே அரசு தலையிட வேண்டும். நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தங்கு தடையில்லாமல் நூல் கிடைக்க வழி செய்ய வேண்டும். ஜவுளித் தொழிலைப் பாதிக்கிற மத்திய அரசின் கொள்கைகள் மாற வேண்டும்.

உரிய நேரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே இந்த தொழிலை அரசால் காப்பாற்ற முடியும்.

இந்த கோரிக்கையோடு மத்திய ஜவுளித் தலைவர் அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பூர் நகரத்தில் தொழில் முனைவோர் - தொழிலாளர்கள் கை கோர்த்து இக் கோரிக்கைகளுக்காக களம் காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் நியாயமானது. வெல்லட்டும். அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் நிச்சயமாக எதிரொலிப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x