Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

அந்தமான் அருகே 29-ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாகிறது; 3 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு: தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

திருச்செந்தூரில் நேற்று காலை 3 மணி நேரத்தில் 17 செ.மீ. மழை கொட்டியதால், செந்திலாண்டவர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

சென்னை / தூத்துக்குடி

வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். தெற்கு அந்தமான் அருகே 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று கருதப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. 29-ம் தேதி தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது, 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 26-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

27-ம் தேதி (நாளை) காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

28-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழக கடலோர பகுதிகள், மாலத்தீவு, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், நேற்று மாலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி, தூத் துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மிக கனமழை கொட்டியது.

பல இடங்களில் இரவிலும் மழை நீடித்தது. திருச்செந்தூரில் 3 மணி நேரத்தில் 17 செ.மீ. மழை பதிவானது. இதன் காரணமாக திருச் செந்தூர் நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. செந்திலாண்டவர் கோயில் கிரிப்பிரகாரம், சண்முகவிலாசம், நாழிக்கிணறு செல்லும் பாதை உள்ளிட்ட பகுதிகளில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. 2-ம் பிரகாரம் வரை மழைநீர் வழிந்தோடியதால் பக்தர்கள் அவதிப்பட்டனர். கடற்கரை பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

தூத்துக்குடி நகரமும் தொடர் மழையால் வெள்ளக்காடாக மாறியது. ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 முதல் மாலை 5.30 மணி வரை 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இருந்து பகல் 1.50 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரையிறங்க முடியாததால் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த விமானத்தில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு உள்ளிட்ட பயணிகள் இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வார இடைவெளிக்கு பின், கடந்த 2 நாட்களாக லேசாக பெய்த மழை, நேற்று கனமழையாக கொட்டியது. இதனால் திருப்பதிசாரம், தேரேகால் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் வெள்ளம் புகுந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுக் கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, அரியலூர், திண்டுக் கல், தென்காசி, தேனி, பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x