Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

தொடர் கனமழை எதிரொலி - 5 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் ஓட்டேரி ஏரி நிரம்பியது: உபரிநீரை வரவேற்று பொதுமக்கள் பூஜை

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, வேலூர் ஓட்டேரி ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அடுத்த படம்: உபரி நீரை வரவேற்று அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த ஓட்டேரி ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நிரம்பியது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சிறப்பாக கட்ட மைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டும் வந்தது. 106 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 140 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். ஏரிக்கு நாயக்கநேரி கால்வாய், குளவிமேடு கால்வாய், மாந்தோப்பு கால்வாய், கணவாய்மேடு கால் வாய், பாலமதி மலை, ஓட்டேரி மலையில் இருந்து வரும் மழை நீர்தான் முக்கிய நீர்வரத்தாக உள்ளது.

அதேபோல், ஓட்டேரி ஏரி முழு கொள்ளளவை எட்டியதும் உபரி நீர் பலவன்சாத்துக்குப்பம் ஏரிக்கு செல்லும் வகையில் 1.5 கி.மீ தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொரப்பாடி, சதுப்பேரி ஏரிக்கு இரண்டு இணைப்பு கால்வாய்கள் உள்ளன. மற்றொரு கால்வாய் சங்கரன்பாளையம் வழியாக சூரிய குளத்துடன் இணைக்கப்பட் டுள்ளது.

ஓட்டேரி ஏரிக்கான நீர்வர்துக் கால்வாய் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதை முறையாக பராமரித்தால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏரிக்கு நீர்வரத்து இருக்கும். சுற்று வட்டார நிலத்தடி நீராதாரமும் பாதுகாக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலேயர்களால் பல்நோக்கு திட்டத்துடன் கட்டமைக்கப்பட்ட ஏரி கடந்த 2015-ம் ஆண்டு முழுமையாக நிரம்பியது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை இருந்தாலும் ஓட்டேரி ஏரிக்கு மட்டும் நீர்வரத்து குறைவாகவே இருந்தது.

வேலூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பிய நிலையில் ஒரு காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு குடிநீர் வழங்கிய ஓட்டேரி ஏரிக்கு மட்டும் நீர்வரத்து பெரிய அளவில் இல்லை. கடந்த சில நாட்களாக பல தடைகளை கடந்து நீரூற்றுகள் மூலம் கிடைத்த தண்ணீரால் ஓட்டேரி ஏரி வேகமாக நிரம்பி நேற்று முழு கொள்ளளவை எட்டிய துடன் உபரி நீரும் வெளியேறியது. இந்த தகவலால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் திரண்டு உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதியில் திரண்டு மகிழ்ச்சியுடன் பூஜை செய்தனர்.

இதற்கிடையில், ஏரி நிரம்பிய தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் ஓட்டேரி ஏரியை பார்வையிட்டனர். மேலும், உபரி நீர் வெளியேறும் பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகளையும் ஆட்சியர் முடுக்கிவிட் டுள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘வேலூர் மாநகராட்சி ஏரிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி, குளங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x