Published : 17 Mar 2016 03:43 PM
Last Updated : 17 Mar 2016 03:43 PM
இந்த தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் சீட் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வரும் போது அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரம், வாசன், அன்புமணி, பிரேமலதா, சுதிஷ் ஆகிய அரசியல் வாரிசுகள் நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி அடுத்த தலைமுறை வாரிசுகளும் தேர்தல் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள்.
திமுகவில் அவ்வாறு ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் பெயர் இந்தாண்டு தேர்தலில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தலில் சீட் கேட்டிருக்கிறார், ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பற்றி அவரிடமே கேட்ட போது, "எனக்கும் அரசியலுக்கும் முதலில் சம்பந்தமில்லை. நான் பேசாமல் படங்கள் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு என போய்க் கொண்டிருக்கிறேன். தேர்தலில் நிற்கும் எண்ணம் இந்த தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் இல்லை.
கட்சிக்கு உழைத்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் சீட் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். நான் சீட் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை. ஒரு தொகுதியில் இவர் நிற்க வேண்டும் என்று யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதே போல என் பெயரில் யாராவது விண்ணப்பித்திருக்கலாம், அதற்கும் எனக்கு சம்பந்தமே இல்லை.
என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று கவிதை ஒன்று வெளியிட்டேன். அதில் இருந்து தான் நான் அரசியலுக்கு வரவிருக்கிறேன் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT