Published : 24 Nov 2021 06:37 PM
Last Updated : 24 Nov 2021 06:37 PM
சங்கராபுரம் அருகே பட்டா நிலத்தில் வழிவிட மறுத்த குடும்பத்தினரை கம்பிவேலி அமைத்து கடந்த 4 தினங்களாக சிறைவைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் ராஜா என்பவர் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. அந்த மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல அப்பகுதி கிராம மக்கள் ராஜாவின் வீட்டை ஒட்டிய 3 சென்ட் நிலத்தை பாதைக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ராஜாவோ பட்டா இடத்தை எப்படி தானமாக அளிப்பது எனக் கூறி மறுத்துவிட்டார்.
இதனால் ஊர்மக்கள் ஒன்றுகூடி, ராஜாவின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறாத படி வீட்டின் வாயில் முன்பு கோயில் இடத்துக்குச் சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால் கடந்த ஒருவாரமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், ஊருக்குள் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமலும் ராஜா குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ராஜாவிடம் கேட்டபோது, எங்களது பட்டா இடத்தில் வழி கேட்டனர். மறுத்து விட்டதால், எனது வீட்டுக்கு முன்புள்ள கோயில் நிலத்தில் கம்பிவேலி அமைத்து நாங்கள் வெளியே புழங்க முடியாத அளவுக்கு தடை செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்.இதனால் நாங்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, அப்பிரச்சனைத் தொடர்பாக கம்பி வேலி அமைப்பதற்கு முன் புகார் வந்தது. கம்பிவேலி அமைத்தபின் புகார் ஏதும் வரவில்லை. நிலம் தொடர்பான பிரச்சனை என்பதால் வருவாய் துறையினர் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியனிடம் கேட்டபோது, பிரச்சனை தொடர்பாக ராஜா குடும்பத்தினரும், ஊர்மக்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT