Published : 24 Nov 2021 05:37 PM
Last Updated : 24 Nov 2021 05:37 PM
இலங்கையில் ஊடக அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றிய உதயன் நாளிதழின் ஆசிரியர் கானமயில்நாதன் காலமானார். அவருக்கு வயது 79.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டையில் 25.07.1942ல் பிறந்தவர் ம.வ.கானமயில்நாதன். தொடக்கத்தில் வீரகேசரியில் தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கியவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தினபதி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
யாழ்ப்பாணத்தில் தமிழில் பத்திரிகை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற தேவை எழுந்தபோது 27.11.1985 அன்று உதயன் நாளிதழ் ம.வ கானமயில்நாதனைக் கொண்டு தொடங்கப்பட்டது.
அக்டோபர் 1995ல் இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றத் தாக்குதலைத் தொடங்கியபோது யாழ்ப்பாணஅலுவலகத்திலிருந்து அச்சு சாதனப் பொருட்ளை எடுத்துக்கொண்டு சரசாலை என்ற ஒரு இடத்திலிருந்து தொடர்ந்து உதயன் நாளிதழை வ.அ.கானமயில்நாதன் தலைமையில் தற்காலிகமாக இயக்கினார்.
2000 மே மாதம் இலங்கை அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியபோதும், யாழ்ப்பாணம்- கண்டி ஏ-9 நெடுஞ்சாலையை மூடியபோது யாழ்ப்பாணத்தில் காகிதம் அச்சிடும் மை தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், 02.05.2006 அன்று உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த ஆயுதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உதயனின் இரண்டு பணியாளர்கள் இருவர் உயிரிழந்து, அலுவலகம் சேதமாக்கப்பட்ட போதும் உதயன் நாளிதழைத் தினந்தோறும் கொண்டு வந்ததில் ம.வ. கானமயில்நாதனின் பங்கு அளப்பரியது.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் ஊடக சுதந்திரத்துக்கான விருதை 17.11.2013 அன்று உதயனுக்கு வழங்கியது. இந்த விருதை ம.வ.கானமயில்நாதனும், உதயன் நாளிதழில் நிறுவனர் ஈ.சரவணபவனும் கூட்டாக இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இலங்கை பத்திரிகையாளர்கள் வரலாற்றில் உள்நாட்டுப் போர் சூழலில் தொடர்ந்து அச்சமின்றிப் பணியாற்றித் தடம் பதித்தவர் வ.அ.கானமயில்நாதன். தொடர்ந்து உதயனின் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணியாற்றி, தனது ஊடகப் பணியில் அசைக்க முடியாத முத்திரையைப் பதித்து வந்தார்.
இந்நிலையில் ம.வி.கானமயில்நாதன் திங்கட்கிழமை (22.11.2021) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூரில் தனது 79 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு தமிழ் ஊடகத்துறையில் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும். உடல் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மயானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT