Published : 24 Nov 2021 04:01 PM
Last Updated : 24 Nov 2021 04:01 PM

சென்னையில் நாளை 1600 கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 25.11.2021 அன்று நடைபெறவுள்ள 1600 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’கோவிட் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோவிட் தடுப்பூசிகள் விலையில்லாமல் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் 18.11.2021 மற்றும் 21.11.2021 ஆகிய நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நாளை (25.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாட்கள் கடந்து இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் 7,91,024 நபர்கள் உள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கோவிட் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிதல் இரண்டும் மிகவும் இன்றியமையாதது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 10,99,195 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்துள்ள நபர்கள் அலட்சியமாக இல்லாமல், இந்தத் தடுப்பூசி முகாமினைப் பயன்படுத்திக்கொண்டு இரண்டாம் தவணைத் தடுப்பூசியினைத் தவறாமல் செலுத்திக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.

எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (25.11.2021) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் பங்குபெற்று கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x