Published : 24 Nov 2021 10:17 AM
Last Updated : 24 Nov 2021 10:17 AM

துணி நூலிற்கான விலையை குறைக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

கோப்புப் படம்

சென்னை

துணி நூலிற்கான விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப் பொருளாக இருந்து வருவது நூல். நூலின் பங்கு ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலே உள்ளது. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. முக்கியமாக, இந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு அதிரடியாக 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டித் தரும் டாலர் சிட்டி திருப்பூரில், நாட்டின் 60 சதவீத பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நூல் விலை உயர்வினால் ஏற்கெனவே எடுத்த ஆர்டர்களை முழுமையாக செய்து முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களை பெற முடியாமலும் திண்டாடி வருகின்றனர்.

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிக் கூடங்கள் இந்த விலை உயர்வினால் இயங்க முடியாத சூழ்நிலையில் தடுமாறி வருகின்றன.

நூலில் பல ரகங்கள் உள்ளன. கடந்த ஓரிரு மாதங்களில் நூலின் விலையும், நவம்பர் மாதத்தில் முக்கியமான நூல் ரகங்களின் விலை உயர்வும் எவ்வளவு என்று ஊடகங்கள், நாளிதழ்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியது;

40ம் எண் நூல் கிலோவிற்கு ரூ. 245 லிருந்து ரூ. 320 ஆகவும், 30ம் எண் நூல் கிலோவிற்கு ரூ. 250 லிருந்து ரூ. 300 ஆகவும், 2/40ம் எண் நூல் கிலோவிற்கு ரூ. 280 லிருந்து ரூ. 340 ஆகவும் என்று அனைத்து ரக நூல்களின் விலைகளும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த விலை உயர்வு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களிடமும், பின்னலாடை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோரிடமும் மிகுந்த அதிருப்தியையும், தங்களது தொழிலின் எதிர்காலத்தைப் பற்றிய ஐயத்தையும் எழுப்பியுள்ளது. விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பதுக்கல், இறக்குமதி பஞ்சிற்கான வரி உயர்வு மற்றும் செயற்கை தட்டுப்பாடே என்று கூறுகின்றனர்.

கரோனா நோய்த் தொற்று குறைந்த பிறகு, கடந்த ஒருசில மாதங்களாகத் தான் ஜவுளித் தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெளி மாநிலத் தொழிலாளர்கள் மீண்டும், மெதுவாக தங்களது பழைய தொழில் நிறுவனங்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், நூலின் வரலாறு காணாத விலை உயர்வு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வரலாறு காணாத விலை உயர்வினால் பாதிப்படைந்துள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள்; ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை தயாரிப்பாளர்கள் மாவட்டந்தோறும் தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். சென்ற வாரம் ஈரோட்டில் கடை அடைப்பை நடத்தி, விலை உயர்விற்கான எதிர்ப்பைக் காட்டி, உடனடியாக மாநில அரசு தலையிட்டு நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தனர். நூல் விலை உயர்வினால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 35 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் - ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் இம்மாதம் 26ம் நாள் முழு அடைப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நூல் விலை உயர்வினாலும், துணி உற்பத்திக்கான புதிய ஆர்டர் கிடைக்கப் பெறாததாலும், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் பல மாதங்களாக வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர். விசைத்தறி ஒன்றின் விலை சுமார் ரூ. 1,10,000/- ஆகும். பல மாதங்களாக வாழ்வாதாரத்திற்கான வருமானமின்றி தவிக்கும் விசைத்தறி உற்பத்தியாளர்கள், தங்களது விசைத் தறியை பழைய இரும்புக் கடையில், எடைக்கு எடை என்ற முறையில், ஒரு தறியை வெறும் ரூ. 31,000/-க்கு விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும் என்றும், பிறகு என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். வரும் நாட்களில் கஞ்சித் தொட்டி திறப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று தங்களது வேதனையை பகிர்கின்றனர்.

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வசதியற்ற ஏழை, எளியவர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்க்க சிந்தனையுடன் ஜெயலலிதா அவர்களும், தொடர்ந்து அதிமுக அரசும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி வந்தது.

கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றினால் பெருமளவு பாதிப்படைந்திருந்த கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 2021-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு 169.41 லட்சம் சேலைகள் மற்றும் 169.31 லட்சம் வேட்டிகள் என்று 490.27 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டு, தொடர் வேலை வாய்ப்பு உறு செய்யப்பட்டு வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் அதிமுக அரசு ஜூலை மாதத்திலேயே விலையில்லா வேட்டி, சேலைக்கான ஆர்டரை வழங்கும் போது, நூலும் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். இதனால் குறிப்பிட்ட காலத்தில் வேட்டி, சேலைகள் தயாரிக்கும் பணி முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பே பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு விடும்.

ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றபின் விலையில்லா வேட்டி, சேலைக்கான ஆர்டர் ஆகஸ்ட் மாதம் தேதியிட்டு, நவம்பர் மாதம் தான் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக நூல் வழங்கப்படவில்லை. விலை உயர்வினால் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் வெளிச் சந்தையில் நூலை வாங்க முடியாமல், விலையில்லா வேட்டி, சேலையை உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட் விலையில்லா மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 750 யூனிட் விலையில்லா மின்சாரமும் அன்றைய அதிமுக அரசால் வழங்கப்பட்டு வந்தது. மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வழங்கும் விதமாக, கைத்தறித் துணிகளுக்கு தள்ளுபடி மானிய திட்டமும், 15 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி மானியமும், மாநில அரசின் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளுக்கு நூலின் தரத்தை மேம்படுத்தவும், இயந்திரங்களின் திறனை மேம்படுத்தவும், Card Wires, Cots Aprons மற்றும் Spindles ஆகிய உ ரிதிபாகங்களை மாற்றம் செய்யும் பொருட்டும் 2,076 கோடி ரூபாயை அதிமுக அரசு நிதி ஒப்பளிப்பு செய்து வழங்கியது.

கைத்தறி நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மானியத்துடன் வீடுகள், சுமார் 75 ஆயிரம் நெசவாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு, புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019 அறிவிக்கப்பட்டு புதிய சலுகைகள், கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் சுமார் 1.60 லட்சம் நெசவாளர்களுக்கு நிவாரணம் என்று, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அதிமுக அரசு பூர்த்தி செய்து வந்தது.

முக்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற முக்கிய சங்கங்களை அழைத்துப் பேசி அவர்களது குறைகளைப் போக்க வேண்டும்;

இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைக்கவும், மூலப் பொருள் ஏற்றுமதியினை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்; மூலப் பொருட்களான, பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும்; நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத GST வரியினை முழுமையாக ரத்து செய்ய, GST குழு கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x