Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் இருந்து இதுவரை 18.5 டிஎம்சி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, கடலில் கலந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்து பரவலமாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
மேலும் தமிழகம் முழுவதும் பெய்த பரவலான மழையால் 10-க்கும் மேற்பட்ட அணைகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன.
அதேபோல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் நிரம்பியுள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி நிரம்பியதையடுத்து அக்.10-ம் தேதி விநாடிக்கு 1,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக நவ.21-ம் தேதி விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நிரம்பியதால், நவ.7-ம் தேதி விநாடிக்கு 500 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக நவ.12-ம் தேதி 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது.
3,064 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் நவ.7-ம் தேதி விநாடிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 3 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டது.
1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நவ.4-ம் தேதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக நவ.7-ம் தேதி விநாடிக்கு 1,200 கனஅடி திறக்கப்பட்டது.
புதிய ஏரியான கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை முதன்முறையாக இந்த ஆண்டு முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டியது. இந்த ஏரியில் இருந்து நவ.7-ம் தேதி விநாடிக்கு 90 கனஅடி உபரிநீர் வெளியேறியது. இந்த ஏரியில் மதகுகள் கிடையாது. அதனால் ஏரி நிரம்பியதும் கலங்கல் வழியாக உபரிநீர் தானாக வெளியேறிவிடும்.
நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் இருந்து 14 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கனஅடி அல்லது ஒரு கோடி லிட்டர்) உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து 1.5 டிஎம்சியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1.5 டிஎம்சியும், சோழவரம் ஏரியில் இருந்து 1 டிஎம்சியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 0.5 டிஎம்சி உபரிநீரும் வெளியேற்றப்பட்டுள்ளது.
அதன்படி இந்த 5 ஏரிகளில் இருந்து மொத்தம் 18.5 டிஎம்சி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, கடலில் போய் கலந்துள்ளது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT