Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விழுப்புரம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:
பாலியல் வன்முறையால் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுவது மிகவும் மனவேதனைக்குரியது. பாலியல் வன்முறையை செய்யக்கூடியவர் தண்டனைக்குரியவர்களே. பாதிப்புக்குள்ளான பெண் குழந்தைகள் எந்த விதத்திலும் தங்களுக்குள் குற்றவுணர்வினை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
எனவே உங்களிடமோ அல்லது உங்கள் தோழர்,தோழிகளிடமோ தங்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத நபர்களால் பாலியல் ரீதியாக பேசுதல், ஆபாச படம் காட்டுதல், ஆபாச படம் பார்க்க தூண்டுதல் அல்லது பாலியல் சீண்டல் வன்கொடுமை நிகழ்வதை அறிந்தால் நீங்கள் அச்சப்படவோ, மனவேதனையடைந்து உங்களை நீங்களே தனிமைபடுத்திக் கொள்ளவோ அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கோ போக வேண்டிய அவசியமில்லை.
உங்களிடம் பாலியல் ரீதியாக பேசுதல், ஆபாச படம் காட்டுதல், ஆபாச படம் பார்க்க துண்டுதல் அல்லது பாலியல் வன்கொடுமை நடந்தால் உங்கள் தாயிடமோ அல்லது நம்பிக்கைக்குரியவரிடமோ தெரியப்படுத்துங்கள். அவர் உங்கள் ரகசியத்தை பாதுகாக்கக் கூடியவராக இருக்க வேண்டும் .
பாலியல் வன்கொடுமை நடக்க நேரிட்டால் மாவட்ட ஆட்சியர், இலவச அவசர தொலைபேசி எண் 1098 - ஐ தொடர்பு கொண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் ஆலோசனையும் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம். வாட்ஸ் அப் எண் 99443 81887 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியை மட்டுமே அனுப்பினால் போதுமானது. மேலும் உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். நாங்களே உங்களை தொடர்பு கொண்டு உங்கள் தேவையை அறிந்து உதவி செய்கிறோம். உங்களிடம் தொலைபேசி இல்லாத நிலையில் அஞ்சலக அட்டையில் முகவரியை குறிப்பிட்டு ‘உதவி தேவை’ என்ற வாசகத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 156, சாரதாம்பாள் தெரு,நித்தியானந்தா நகர் வழுதரெட்டி, விழுப்புரம் 605401 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு, நம் மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிகுந்த மாவட்டமாக உறுதி செய்திடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT