Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

கருங்காலிக்குப்பம் கிராமத்தில் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவர்கள் பாதிப்பு: சமையலர், உதவியாளர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை

போளூர் அருகே கருங்காலிக் குப்பம் கிராமத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 19 மாணவர்களும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இதுதொடர்பாக சமையலர், உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கருங்காலிக் குப்பம் நடுநிலைப் பள்ளியில் 130 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் பலர், பள்ளியில் நேற்று பிற்பகல் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, உணவில் பல்லி இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்த பல்லியை எடுத்து சமையலரிடம் மாணவர் புருஷோத்ராஜ் கொடுத்துள்ளார். இதையடுத்து, மாணவர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் வழங்கப்பட்ட உணவை 19 மாணவர்கள் சாப்பிட்டனர். இதனால் அவர்கள் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் சிராஸ்னி(7), புருஷோத்ராஜ்(12), மதி(7), ஞானவேல்(9), நிஷா(8), ரஞ்சினா(7), அசேன்(7), திலிப்குமார்(11), தாமோதிரன்(12), கவின் குமார்(10), இலக்கியா(8), ஷேமளா(7), பார்கவி(5), அனுஷ்கா(8), மாலதி(7), சுவேதா(8), நவீன்(5), திரிஷா(8), தர்ஷினி(7) ஆகிய 19 மாணவர்களும் வடமாதிமங்கலம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சத்துணவில் பல்லி விழுந்தது குறித்து கல்வித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நேரில் சென்று கேட்டறிந்தனர்.

இதற்கிடையில், சத்துணவு தயாரிக்கும் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் சமையலர் அன்னம் மாள், சமையல் உதவியாளர் ராஜேஸ்வரி ஆகியோரை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x