Published : 23 Nov 2021 07:26 PM
Last Updated : 23 Nov 2021 07:26 PM

சிறுமியை மணந்து, நெருக்கமான படங்களை முகநூலில் வெளியிட்ட இளைஞர்: உயர் நீதிமன்றம் அபராதம்

சென்னை

சிறுமியை மணமுடித்து, அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், 18 வயது பூர்த்தியாகாத பெண்ணைக் காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் பெண்ணின் தாயார் குன்னம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுரேஷ் மீது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதாகி, பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்

சுரேஷ் சிறையில் இருந்தபோது, அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியானதால் வேல்முருகன் என்பவருக்கு அவரது பெற்றோர் மணமுடித்தனர். இந்நிலையில் தனது மனைவி சட்டவிரோதக் காவலில் இருப்பதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரியும் சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பெண்ணுக்கு வேறு ஒருவருடன் மணமாகிவிட்டதால், வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தினர்.

ஆனால் குடும்பத்தினரின் சட்டவிரோதக் காவலில் இருக்கும் மனைவியை நேரில் ஆஜர்படுத்தி விசாரித்தால், தன்னுடன் வருவதற்கே விருப்பப்படுவார் எனவும், வழக்கை வாபஸ் பெற முடியாது எனவும் சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்தப் பெண், தாயார், கணவன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது நீதிபதிகளிடம், தனது சொந்த விருப்பத்தில், பெற்றோரின் சம்மதத்துடன்தான், வேல்முருகனை மணமுடித்ததாக அந்தப் பெண் தெரிவித்தார். மேலும், சுரேஷுக்கு ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும், சுரேஷின் நடத்தை சரியில்லாததால் அவரை விட்டுப் பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது, தன் மகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுரேஷ் முகநூலில் வெளியிட்டுள்ளதாக தாய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதிகள், அந்தப் பெண்ணை மீட்க கோரிய சுரேஷின் வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மேலும், சுரேஷுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அந்தத் தொகையை 8 வாரத்தில் பெண்ணின் தாயாருக்குக் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x