Published : 22 Nov 2021 10:22 PM
Last Updated : 22 Nov 2021 10:22 PM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் சூழலில், கோவை மாநகராட்சியை மையப்படுத்தி புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் அறிவித்தது, திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு அரசியில் கட்சியினரிடையே உள்ளது.
அதற்கேற்ப, தேர்தல் தொடர்பான பணிகளை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதியிலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களே, எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.
இதே நிலை தொடர்வதை தடுக்கவும், கோவையில் திமுகவை வாக்குவங்கி ரீதியாக பலப்படுத்தவும், நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கவும், வஉசி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில், கோவை மாநகரை மையப்படுத்தி புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், முதல்வரின் உரையில் இருக்கும் என அக்கட்சியினரிடையேயும், பொதுமக்களிடையேயும் எதிர்பார்ப்பு இருந்தது.
அதற்கேற்ப, இன்று (22-ம் தேதி) வஉசி மைதானத்தில் நடந்த விழாவில் கோவை மாநகராட்சியை மையப்படுத்திய புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இது திமுகவினரிடையே வரவேற்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் சிலர் கூறும்போது,‘‘ கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.1,132 கோடி ஒதுக்கியது, மாநகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம், ரூ.200 கோடி மதிப்பில் 5 திட்ட சாலைகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல், மாநகராட்சியின் இணைப்புப் பகுதியான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வெள்ளகிணறு ஆகிய பகுதிகளில் ரூ.309 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துதல், இடநெருக்கடியை தவிர்க்க சிறைச்சாலை நகருக்கு வெளியே மாற்றப்படும், சிறையிருந்த இடத்தில் ரூ.200 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா செயல்படுத்தப்படும்,
மாநகரில் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக ரூ.11 கோடி கூடுதலாக ஒதுக்கீடு, கோவை மக்களின் மருத்துவ வசதிக்காக ரூ.16 கோடி மதிப்பில் மருத்துவ மையங்கள், 3 மருத்துவ ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும், ரூ.20 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடைபெறும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அரசாணைகளும் விரைவில் வெளியிடப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
விமான நிலைய விரிவாக்கம், திடக்கழிவு மேலாண்மைப் பணி, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் விநியோகம், சாலை மேம்பாடு, இட நெருக்கடியை தவிர்க்க சிறை மாற்றம் போன்றவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாகும். அதுதொடர்பாக தற்போது முதல்வர் அறிவித்துள்ளது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமின்றி, திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் சூழலில், மக்களிடம் இந்த அறிவிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இது திமுகவுக்கு பலம் சேர்க்கும்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT