Published : 22 Nov 2021 03:52 PM
Last Updated : 22 Nov 2021 03:52 PM
தொழில் துறையில் முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு பெற்ற திட்டங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல் மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வ.உ.சி. மைதானத்தில் இன்று (நவ.22) நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ரூ.646.61 கோடி மதிப்பில் 25,123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ.89.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 128 திட்டங்களைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.557.91கோடி மதிப்பில் 70 புதிய திட்டப் பணிகளுக்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேரூரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது;
"மக்கள் பயன்பாட்டுக்காக இவ்விழா நடக்கிறது. ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமின்றி, ஓட்டு போடாதவர்களுக்கும் எனது அரசு செயல்படும். அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள்தான்.
ரூ.1,132 கோடி தொகை கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுப் பணிகள் முடிக்கப்படும். கோவை மாநகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படும். கோவையில் 5 திட்ட சாலைகள் ரூ.200 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மத்திய சிறை நகருக்கு வெளியே மாற்றி அமைக்கப்படும். சிறையை மையப்படுத்தி காந்திபுரம் இருந்த பகுதியில் உலகத் தரமிக்க செம்மொழிப் பூங்கா ரூ.200 கோடி மதிப்பில் 2 கட்டங்களாக அமைக்கப்படும். திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் ரூ.11 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். ரூ.63 கோடி மதிப்பில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 மருத்துவ ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
கோவையில் நாளை (23-ம் தேதி) தொழில் முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இதில் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தைத் தொழில் துறையில் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். பேச்சை விட செயலில் எங்களது நடவடிக்கை இருக்கும். பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT