Published : 22 Nov 2021 03:06 AM
Last Updated : 22 Nov 2021 03:06 AM
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிபிஎஸ்இ பாடத் திட்ட 10-ம் வகுப்பு தமிழ் மொழிப்பாடத் தேர்வு வினாத்தாளில் பல்வேறு இடங்களில் பிழைகள் இடம் பெற்றிருந்ததால் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பெரும் குழப்பமடைந்து உள்ளனர்.
2020-21-ம் கல்வியாண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தவிர்க்கும் வகையில், 2021-22-ம் கல்வியாண்டில் பொதுத் தேர்வை, இருபருவப் பொதுத் தேர்வாக நடத்தும் முறையை சிபிஎஸ்இ அறிவித்தது. இந்த புதிய நடைமுறைப்படி பொதுத் தேர்வு இரண்டாக பிரிக்கப்பட்டு முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மைனர் தேர்வுகள் என்று அழைக்கப்படும் அந்தந்த மாநில மொழிப்பாடத் தேர்வுகள் நவ.17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் பலவுள் தெரிவு செய்தல் (Multiple Choice) அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன.
இதில், தமிழ் பாடத்துக்கான தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக சிபிஎஸ்இ வழங்கிய வினாத்தாளில் பல இடங்களில்பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகள் இருந்ததால், இந்த தேர்வைஎழுதிய மாணவ, மாணவிகள் பெரும் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து தமிழாசிரியர் ஒருவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மொழிப் பாடங்களுக்கான வினாத் தாள்கள் அந்தந்தமொழி ஆசிரியர்கள் மூலமாக தயாரிக்கப்பட்டு, அவை பின்னர்அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேர்வுக்கான வினாத் தாளில் 2-ம் பக்கத்தில் `நாஞ்சில் நாட்டில்’ என்பதற்கு பதிலாக `நாஞ்கில் நாட்டில்’ என்றும், `கவிமணி மகனாக’ என்பதற்கு பதிலாக `கவிமணி மகளாக’ என்றும், 11-ம் பக்கத்தில் 34-வது வினாவில் `தேதமிழ்’ என தொடர்பில்லாத சொல்லும், 12-ம் பக்கத்தில் 9-வது பிரிவில் `பல’ என தேவையற்ற ஒரு சொல்லும், 40-வது வினாவில் `காய்ந்த தோகையும்’ என்பதற்கு பதிலாக `காய்ந்த கோகையும்’ என்றும், பக்கம் 13-ல் 10-வது பிரிவில் `தனியார் நிறுவனம்’ என்பதற்கு பதிலாக `தனியார் நிவைனம்’ என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பக்கம் 14-ல் 46-வது வினாவுக்கு பலவுள் தெரிவு செய்தலில் விடைப் பகுதியில் தேர்வு செய்ய சரியான பதிலே தரப்படவில்லை.
மேலும், வினாத் தாளையாரேனும் பிரதி எடுத்துவிடக்கூடாது என்பதற்காக அச்சிடப்பட்டுள்ள பெரிய அளவிலான எண்கள் பல இடங்களில் வினா மற்றும் விடைகளுக்கு மேலேயே அச்சிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் அவற்றை படிக்க முடியவில்லை.
இந்த குறைகளை சரி செய்வதுடன், வினாத்தாள்களில் பிழைகள் இருக்கக் கூடாது என்பதில் இனியாவது சிபிஎஸ்இ நிர்வாகம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT