Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM
சென்னையில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்டறிந்து மீட்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ‘காவல் கரங்கள்’ என்ற பெயரில் உதவி மையம் அமைக்கப்பட்டது. இந்த உதவி மையம் மேரிரஜு என்ற பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் சென்னையில் இயங்கி வருகிறது.
‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் மீட்கப்படுபவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படுவதுடன் அரசு மற்றும் அரசு சாரா காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்களுடைய முகவரியை கண்டறிந்து குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் பணிகளையும் ‘காவல் கரங்கள்’ செய்து வருகிறது.
‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் 1,055 ஆதரவற்ற நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 901 நபர்கள் தங்கும் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். 79 பேர் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 75 மனநலம் குன்றிய நபர்கள் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 200 ஆதரவற்ற உடல்கள் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “சென்னையில் அண்மையில் பெய்த கன மழையின்போது ஓட்டேரியில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில், மழை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு மழைவெள்ளத்தில் சிக்கிய மனநலம் பாதித்த 42 பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு காவல் கரங்கள் உதவி மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் புதுப்பேட்டையில் உள்ள காப்பகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட 47 மனநலம் குன்றிய பெண்கள் இந்த அமைப்பு மூலம் மீட்கப்பட்்டனர்.
மேலும் கடந்த ஜூலை 25-ம் தேதி காவல் கரங்கள் உதவி மையம் மூலம் சென்னையில் மீட்கப்பட்ட 127 வெளி மாநில நபர்கள் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் துறையின் ‘காவல் கரங்கள்’ உதவி மையம் தன்னார்வலர்களுடன் இணைந்து மனிதநேயத்துடன் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது'’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT