Published : 21 Nov 2021 06:25 PM
Last Updated : 21 Nov 2021 06:25 PM
பாலியல் வன்கொடுமை, தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மாணவிகளைக் காக்க சிறப்புத் திட்டம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி, தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. சிறப்பாகக் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்து மற்றவர்களுக்கு உதவ நினைத்த மாணவி, யாரோ ஒரு பாவியின் கொடுமையால் பள்ளிப் படிப்புக்கு முன்பே வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பது மிகவும் சோகமானது.
வெண்ணெய்மலையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறிது நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மாணவியின் தற்கொலையை வழக்கமான தற்கொலை என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், நேற்று வெளியான மாணவியின் தற்கொலைக் கடிதம்தான் நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
மாணவியின் தற்கொலைக் கடிதத்தில் உள்ள ஒவ்வொரு வாசகமும் தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்குபவை ஆகும். ''பாலியல் வன்கொடுமையால சாகுற கடைசிப் பொண்ணு நானாகத்தான் இருக்கணும். என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழறத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை. ஆனா முடியாதில்ல'' என்ற அந்த மாணவியின் இறுதி வாசகங்களைப் படிக்கும்போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எந்த அளவுக்கு மன உளைச்சலையும், அச்சத்தையும் அனுபவித்திருப்பார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. மாணவியின் எண்ணப்படியே, இனி எந்தப் பெண்ணும் பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுப்பதுதான் வெண்ணெய்மலை மாணவிக்குத் தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
பாலியல் வன்கொடுமை காரணமாகப் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது இது முதல் முறையல்ல. கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நிகழ்வு ஆகும். கடந்த 12ஆம் தேதி கோவை தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இப்போது கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தம்மைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியவர் யார் என்பதை வெளியில் சொல்வதற்கு அச்சமாக இருக்கிறது என இறக்கும் தருவாயிலும் அம்மாணவி கூறியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, சம்பந்தப்பட்ட குற்றவாளி மிகப்பெரிய சக்தியாக இருப்பாரோ என்ற ஐயம் எழுகிறது. மாணவியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் வேளையில், அவரது தற்கொலைக்குக் காரணமான குற்றவாளி மிருகம் யாராக இருந்தாலும் அவரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
கோவை மற்றும் கரூர் மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் அவற்றால் நிகழ்ந்த தற்கொலைகள் மட்டுமின்றி, திண்டுக்கல் தனியார் செவிலியர் கல்லூரியில் மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. கல்வி கற்கவும், அறிவை வளர்க்கவும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகள் தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாவதும், அதைத் தாங்க முடியாத வலி மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதும் உலகின் மூத்த நாகரிகமான தமிழர் கலாச்சாரம் கடுமையான சீரழிவுக்கு உள்ளாகி வருவதையே காட்டுகிறது. இதற்காக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் வெட்கப்பட வேண்டும். இத்தகைய குற்றங்கள் இனி நடக்காமல் தடுப்பதும், மனிதத் தன்மையற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதும்தான் இந்த அவப்பெயரில் இருந்து தமிழ்ச் சமுதாயம் மீண்டு வருவதற்கான பரிகாரங்கள் ஆகும்.
காலம் காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. அதற்கான முதன்மை ஆயுதம் கல்விதான். அத்தகைய கல்வியைப் பெறுவதற்காகச் செல்லும் இடங்களில் மாணவிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது மன்னிக்க முடியாதது ஆகும். ஒரு மாணவியின் தற்கொலையால் ஏற்பட்ட துயரம் தீருவதற்கு முன்பே, அடுத்த மாணவியையும் தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள் என்றால் அந்தப் பாவிகளுக்கு சட்டத்தின் மீதும், அதைச் செயல்படுத்தும் அமைப்புகள் மீதும் பயமில்லை என்றுதான் பொருள். இது மாணவிகளின் பாதுகாப்புக்கு நல்லதல்ல.
மற்றொரு புறம் பாலியல் சீண்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகும் மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தவறு. இது இத்தகைய குற்றங்களைத் தடுக்க உதவாது. மாறாக, பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் அதைச் செய்வதற்கான துணிச்சலையே தரும். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான துணிச்சலை மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு துணை நிற்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் ஆகியவற்றில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை வழங்கப்படுவதைத் தடுத்தல், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்கு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குதல், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர சட்ட உதவிகளைப் பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய விரிவான செயல் திட்டத்தை அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். இதற்காக வல்லுநர் குழுவை அரசு அமைக்க வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT