Published : 21 Nov 2021 05:03 PM
Last Updated : 21 Nov 2021 05:03 PM

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: ராமதாஸ், தினகரன் கண்டனம்

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

“சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஐஐடியில் தேசியத் தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அப்போதும் அதைக் கடுமையாகக் கண்டித்தேன். அதைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது.

2019ஆம் ஆண்டு ஐஐடி வைர விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைர விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அந்த வழக்கத்தை ஐஐடி மாற்றக் கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாகப் பாடப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. ஐஐடியில் அவ்வப்போது இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல. இதனை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சரியானதல்ல'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x