Published : 21 Nov 2021 04:35 PM
Last Updated : 21 Nov 2021 04:35 PM
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நதி நீர் உரிமையை நாம் பறிகொடுக்கிறோம் என பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் குற்றம் சாட்டினார்.
நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வேலூரில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பாஜக நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது. இந்திய அளவில் பாஜக மீது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தேர்தலின்போது சிலிண்டருக்கு ரூ.100 குறைப்போம் என வாக்குறுதி அளித்தார்கள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
இந்தியாவில் 25 மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் ஏன் இதைச் செய்யவில்லை? பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என வாக்குறுதி அளிக்கவில்லை. கடந்த 8 மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 உயர்ந்தது. அதனையும் மோடி ஒரே நாளில் 10 ரூபாய் குறைத்துவிட்டார்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் நாடு முழுவதும் விலை கட்டுக்குள் வரும். ஆனால், இதற்கான முயற்சியைத் தமிழக அரசு எடுக்காமல் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி நாளை முதல் டிசம்பர் மாதம் 3-ம் தேதி வரை பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடைபெற உள்ளது.
மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்க பிரதமர் மோடி பயிர் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதன் மூலம் 42 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து மத்தியக் குழு ஆய்வு செய்ய உள்ளது. அந்தக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நிவாரண நிதி வழங்கப்படும்.
பருவமழையால் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் சீறிப் பாய்ந்து செல்கிறது. தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் ஓடும் பாலாற்றில் இதுவரை ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த அதிமுக-திமுக தடுப்பணையைக் கட்டி நீரைச் சேமிக்கத் திட்டமிடவில்லை. இதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது மக்களுடைய தவறு. இது பற்றி மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் 110 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்கினால் மட்டுமே தமிழகத்திற்குத் தண்ணீர் வரும். இதன் மூலம் 5 மாவட்டங்கள் பயன்பெறும். ஆனால் 110 அடி வருதற்குள்ளேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திமுக ஆட்சி வரும்போதெல்லாம் நதி நீர் உரிமையைப் பறிகொடுத்து வருகிறோம்’’.
இவ்வாறு கரு.நாகராஜன் தெரிவித்தார்.
அப்போது, பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்டப் பார்வையாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் தசரதன், மாவட்டத் துணைத்தலைவர் ஜெகன், மாவட்டப் பொதுச் செயலாளர் பாபு, செயலாளர்கள் சரவணன், தீபக், சங்கர், மோகன், மண்டலத் தலைவர்கள் நந்தகுமார், முருகன், தேவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT