Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM
பருவமழை சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு 2 பிரிவாகபிரிந்து அதிக சேதம் ஏற்பட்டுள்ளபகுதிகளை 2 நாட்களில் பார்வையிடுவார்கள். தொடரும் சேதங்களை கணக்கிட்டு கூடுதல் தொகை கோரப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாநிலஅவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வுமேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
7 அதிகாரிகள் குழு
வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட, 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் 21-ம்தேதி (இன்று) மதியம் வருகின்றனர். வந்த பிறகு, நவ. 22, 23 ஆகிய இரண்டு நாட்களிலும் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிட உள்ளனர்.
22-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும், அதேபோல கன்னியாகுமரிக்கு ஒரு குழுவும் செல்கிறது.
23-ம் தேதி ஒரு குழு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சைக்கும் மற்றொருகுழு வேலூர், ராணிப்பேட்டைக்கும் செல்கிறது. ஒரு குழுவை வருவாய்நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டியும், மற்றொரு குழுவை வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த்தும் வழிநடத்துவார்கள்.
ஆட்சியர்களுக்கு அறிவுரை
எந்தெந்த இடங்களுக்கு செல்லவேண்டும் என்பதையும், பாதிக்கப்பட்ட இடங்களையும் மாவட்ட ஆட்சியர்கள் குறிப்பெடுத்து, அந்தஇடங்களுக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளோம்.
மேம்போக்காக இல்லாமல், உண்மையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கும் வாய்ப்பையும் மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
மாவட்ட ஆட்சியர்கள் அங்கு இருக்கும் விவசாய சங்கங்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள சேதங்களை எடுத்துக்கூறும்படி கூறியுள்ளோம். பின்னர், 24-ம் தேதி இந்த குழு முதல்வரை சந்திக்கிறது.
ஏற்கெனவே அரசின் சார்பில் ரூ.2,629.29 கோடி நிவாரணம் கோரியுள்ளோம். இதில் ரூ.549.63கோடியை உடனடியாக வழங்குமாறு கூறியுள்ளோம். முதல்கட்டமாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சேதவிவரங்கள் புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ளஅனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்வதால் இங்கு மிகப்பெரிய பாதிப்பு உள்ளது.
எனவே, முதலில் தயார் செய்த கேட்பு தொகையுடன், இப்போது தயாரிக்கும் கேட்பு தொகையும் சேர்த்து கேட்க உள்ளோம்.
அதிக பாதிப்பு உள்ள பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட வலியுறுத்தியுள்ளோம்.
மழையின் காரணமாக மாணவர்களுக்கான சான்றிதழ்கள், முக்கியமான பத்திரங்கள் தொலைந்ததுஉள்ளிட்டவற்றுக்கும் உடனடியாகநடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
419 நிவாரண முகாம்கள்
தமிழகத்தில் இதுவரை 14 மாவட்டங்களில் 419 நிவாரண முகாம்களில், 34,397 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை தொடர்வதால் அனைத்து முன்னெச்சரிக்க நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களும் தயார் நிலையில் உள்ளனர். கனமழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT