Published : 20 Nov 2021 05:13 PM
Last Updated : 20 Nov 2021 05:13 PM
நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், சட்டங்களின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கோவை தனியார் பள்ளியில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக, 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. அச்சோக நிகழ்வின் வடு மறைவதற்குள்ளாக, கரூரில் பாலியல் வன்கொடுமை காரணமாக 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பேரதிர்ச்சியும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது.
அம்மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசிப் பெண் தானாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதைக் கூறவே பயமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
'இந்த பூமியில் வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாதுல்ல' என்று அம்மாணவி கடிதத்தில் தெரிவித்துள்ளதோடு, 'இனி எந்த ஒரு பெண்ணும் தன்னைப் போன்று சாகக் கூடாது' என்று தெரிவித்துள்ளது நமக்குக் கண்ணீரை வரவழைக்கிறது.
இக்கடிதத்தின் வாயிலாக அம்மாணவியின் பாதிப்பையும், மன உளைச்சலையும் நம்மால் உணர முடிகிறது. மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழந்தைகள், பள்ளியில், சுற்றுப்பகுதியில், உறவினர்கள், சில ஆசிரியர்கள், முகம் தெரிந்த மற்றும் தெரியாத நபர்கள் என்று பலதரப்பட்ட மக்களால் பல வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது வேதனைக்குரியது.
எனவே, தனியார் பள்ளி மற்றும் அரசுப் பள்ளியில் நடக்கும் மாணவிகளுக்கான பாலியல் சீண்டல்களை அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவர்களை வளர்த்தெடுப்பதில், நல்வழிப்படுத்துவதில் கூடுதல் பொறுப்பு தங்களுக்கு இருப்பதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஆசிரியர் பணியின் உயர்ந்த விழுமியங்களை ஆசிரியர்கள் உணர வேண்டும். மாணவர்களின் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மாணவர்கள், காவல்துறையினரை எளிதாக அணுக முடியும் என்ற நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எடுத்துரைக்கிறது.
இது ஒருபுறமிருக்க, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலாப் பயணியர் இந்தியாவுக்குத் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணியருக்கு டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது நாட்டிற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களான போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 12ஆம் வகுப்பு மாணவிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் பெற்றோர், உறவினர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment