Published : 20 Nov 2021 11:55 AM
Last Updated : 20 Nov 2021 11:55 AM

திருப்பூர் எம்.பி. சுப்பராயனின் தாயார் மறைவு: முத்தரசன் இரங்கல்

கோப்புப் படம்

சென்னை

தாயின் பிரிவால் வாடும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக வருந்துவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:

"இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி.யின் தாயார் கே.சுப்பாத்தாள் (99) இன்று (20.11.2021) அதிகாலையில், திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையுற்றோம்.

திருப்பூர் நகரில் மில் தொழிலாளர் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட கே.சுப்பாத்தாள் குடும்பச் சுமையை முழுமையாக ஏற்று நடத்தியவர். இவரது கணவர் குப்புசாமி தனலட்சுமி மில் தொழிலாளி. தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டு வந்தவர். சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார்.

இவர்களுக்கு கே.ராமசாமி, கே.சுப்பராயன், கே.கோவிந்தசாமி, கே.துரைசாமி, லட்சுமி மற்றும் மோகனா என்ற நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இதில் மூத்த மகன் கே.ராமசாமி அண்மையில் காலமாகிவிட்டார். அனைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைவர்களில் ஒருவருமான கே.சுப்பராயன் எம்.பி., பனியன் தொழில் வளர்ச்சிக்கும், தொழிலாளர் நலனுக்கும் பாடுபட்டு வருபவர். மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பத்தாள் அம்மையார் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது."

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x