Published : 20 Jun 2014 10:49 AM
Last Updated : 20 Jun 2014 10:49 AM
மேலேரிப்பாக்கம் அருகே, சாலை யில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம், மருந்து தொழிற் சாலையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், பலாத்காரம் செய்ய முயன்றதால், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு தொழிற்சாலை யில் வேலைவாய்ப்புக் கோரி, கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத் துக்கு உட்பட்ட மேலேரிப்பாக்கம் ஊராட்சி பகுதியில், மத்திய அரசின் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொழிற்சாலை கட்டுமானப் பணி செய்துவந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாஸ்கரன் பிரதீப்(27), ரங்கன் (28), ஆகிய இளைஞர்கள், புதன்கிழமை இரவு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த, மேலேரிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அந்த பெண் கூச்சலிட்டதால், அருகில் இருந்த கிராம மக்கள் சிலர் ஒடிவந்தனர். அவர்களைக் கண்டதும், இளைஞர்கள் இருவரும் ஓடிமறைந்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் செங்கல்பட்டு தாலுகா போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், தொழிற்சாலையில் இருந்த பாஸ்கரன் பிரதீப்பை போலீஸார் கைது செய்தனர். மற்றொரு இளைஞர் தப்பிச் சென்றார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மேலேரிப் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வியாழக்கிழமை தொழிற் சாலை நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் இளங்கோவன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் கிராம மக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தொழிற்சாலையில் பணி அளிக்க வேண்டும், தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு முன்னுரிமை அளித்து தொழிற்சாலையில் பணி வழங்க வேண்டும். மேலும், தொழிற்சாலையில் இருந்து கிராமத்தினுள் வரும் பாதையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து வட்டாட்சியர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, “கிராமப் பகுதிக்கு செல்லும் பாதைக்கு இரும்புக் கதவுகள் அமைத்து, பாதுகாவலர் நியமிக்கப்படுவார். மேலும், கிராம மக்களின் தகுதிக்கு ஏற்ப தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்” என தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT