Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

ஊரெல்லாம் மழை வெள்ளம்: ராதாபுரம், திசையன்விளை வட்டாரங்களில் குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் முழுக்கமழை வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், ராதாபுரம், திசையன்விளை வட்டாரங்களில் 100-க்கும் மேற்பட்ட குளங்கள் பெருகாதது விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் பெரும்பாலான குளங்கள் பெருகவில்லை.

ராதாபுரம் வட்டத்தில் உள்ள அனுமன்நதி, ஆலந்துறையாறு, நம்பியாறு ஆகியவற்றில் மழைவெள்ளம் வீணாக செல்கிறது. இந்த மழை வெள்ளத்தை விவசாயகுளங்களுக்கு கொண்டு செல்லகால்வாய் வசதி இல்லாததால் மழைபெய்தும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும் குளங்களுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தை கால்வாய்கள் மூலம் நீராதாரங்களுக்கு கொண்டு செல்லும் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், இப்பருவத்தில் அதிக அளவிலான மழைவெள்ளம் வீணாகியிருக்கிறது.

கொடுமுடியாறு அணையின்கீழ் 44 பாசன குளங்கள் உள்ளன. இந்த அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் ஒவ்வொரு குளத்துக்கும் சென்று கடைமடை வரையில் செல்ல வேண்டும். இந்தஅணையின் கீழுள்ள 44 குளங்களில் இதுவரை 22 குளங்கள் மட்டும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுபோல், நம்பியாறு அணையின் கீழ் 40 குளங்கள் உள்ளன. இதிலும், பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்தின்கீழ் 29 பாசன குளங்கள் உள்ளன. இவற்றில் 9 குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதமுள்ள 20 குளங்கள் மானாவாரி குளங்களாக தண்ணீர் நிம்பாமல் உள்ளன.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்தின் கீழ் 40 குளங்கள் உள்ளன. இவற்றில் ஒரு குளம்கூட இதுவரை நிரம்பவில்லை. மொத்தத்தில் ராதாபுரம் வட்டத்தில் 122 குளங்கள் இன்னமும் நிரம்பவில்லை. இதுபோல், திசையன்விளை வட்டாரத்திலும் பெரும்பாலான குளங்கள் பெருகவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக, பழவூர் கிராம முன்னேற்ற சங்க தலைவர் இசக்கியப்பன் கூறும்போது, ``நல்ல மழை பெய்திருக்கிறது. அணைகள் நிரம்பி வருகின்றன. ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடி வீணாக கடலுக்கு செல்கிறது. ஆனாலும் குளங்கள் நிரம்பவில்லை. மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைவெள்ளம், தேசியநெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பாலங்களில் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டுள்ளதால், குளத்துக்கு தண்ணீர் வரமுடியாமல் வீணாக செல்கிறது” என்றார்.

விவசாயி கலைமுருகன் கூறும்போது, ``ராதாபுரம் வட்டாரத்தில் அதிகமான குளங்கள் நிரம்பவில்லை. கொடுமுடி அணையில் இருந்து, வள்ளியூரான் கால்வாய், வடமலையான் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒவ்வொரு குளத்துக்கும் சென்று நிரம்பிய பின்னர் அதன் கீழ் உள்ள குளங்களுக்கு செல்கிறது.

இது தவிர மானாவாரி குளங்கள் நிரம்புவதற்கு கால்வாய் வசதிகள் இல்லை. எனவே பெரும்பாலான மானாவாரி குளங்கள் நிரம்பவில்லை. கொடுமுடி அணையின் கொள்ளளவை இன்னும் அதிகரிக்கவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x