Last Updated : 19 Nov, 2021 09:28 PM

 

Published : 19 Nov 2021 09:28 PM
Last Updated : 19 Nov 2021 09:28 PM

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து அதிகமான நிதியை பெறாவிட்டால் புதுச்சேரி திவாலாகி விடும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறாத்து அவர் இன்று(நவ.19) கூறியதாவது:"கடந்த ஓராண்டுக்கு முன்பு 3 விவசாய விரோத சட்டங்களை பிரதமர் மோடி கொண்டுவந்தார். அதனை நாட்டில் உள்ள விவசாயிகள் எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இப்போது பஞ்சாப், உத்தரபிரசேதம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வரவுள்ளது.

இதில் உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி நேற்று 3 விவசாய விரோத கருப்பு சட்டங்களை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்ப பெறுவதாகவும், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த சட்டங்களை பிரதமர் திரும்ப பெற்றதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், பிரதமர் விவசாயிகளிடம் சரணாகதி அடைந்துள்ளார். விவசாயிகளின் பலம் தெரியாமல் அவர்களை எதிர்த்து பிரதமர் மூக்கறுபட்டுள்ளார். இது விவசாயிகளுக்கும், எதிர்க்கட்சிகளும் கிடைத்த வெற்றி. பிரதமரை போல் புதுச்சேரி பாஜகவினரும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சிபிஐ இயக்குநர், அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட மீண்டும் 5 ஆண்டுகள் பணியில் இருப்பதற்கான ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதனை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் முழுமையாக எதிர்க்கிறது. இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி விட்டால் சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்கள் மோடியின் கைபாவையாக தான் இருப்பார்கள். நியாயமான முறையில் செயல்படமாட்டார்கள். ஆகவே, இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்.

புதுவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், முதல்வர் ரங்கசாமி சிவப்பு அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார். நேற்று பெய்த மழையால் புதுச்சேரியே வெள்ளக்காடு ஆகியுள்ளது. எனவே, முதல்வர் ரங்கசாமி பாரபட்சமின்றி அனைத்து ரேஷன் கார்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

நிதித்துறை செயலர் கடந்த 11ம் தேதி அனைத்து துறைக்கும் அனுப்புள்ள கடிதத்தில், புதுச்சேரி மாநில அரசு பெட்ரோல், டீசலுக்கு வாட் வரியை குறைத்ததன் மூலமாக இந்தாண்டுக்கு ரூ.400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 2022-23 ரூ.1,400 கோடி சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு புதுவைக்கு கிடைக்காது. எனவே, நமக்கு ரூ.1,800 கோடி வருமான இழப்பு ஏற்படும். தனித்தனியாக வருமானத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதிலிருந்து புதுச்சேரி மாநிலம் நிதி நெருக்கடியில் தவிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கடனை தள்ளுபடி செய்வோம். மத்திய நிதி குழுவில் புதுவையை சேர்ப்போம். மாநில அந்தஸ்து கொடுப்போம், நிதியை வாரி வழங்குவோம் என உறுதி அளித்தார்கள். ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது மழையாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத்துக்கு அதிகப்படியான நிதியை பெற்றால் ஒழிய புதுச்சேரி மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது. அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரி மாநிலம் திவாலாகி விடும்."இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x