Published : 19 Nov 2021 08:01 PM
Last Updated : 19 Nov 2021 08:01 PM
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர், சட்டப்பேரவை விதி எண்.110-இன் கீழ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத் திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் எனும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
முதல்வரின் அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், 318 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் உள்ளிட்ட 1464 பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்கிடும் வகையில், பள்ளிக்கல்வித் துறையின் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும், கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி, ஆங்கில இலக்கண பயிற்சி, செயல்வழி கற்றல் முறை பயிற்சி , புதிய பாடத் திட்ட பயிற்சி, ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி உள்ளிட்ட 35 வகையான பணியிடைப் பயிற்சிகளுடன், அறிவுத் திறன் வகுப்பு பயிற்சி, கணினிப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கிட அரசாணை (நிலை) எண்.89, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, நாள் 19.11.2021-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT