Published : 19 Nov 2021 04:33 PM
Last Updated : 19 Nov 2021 04:33 PM

தொடக்கத்திலேயே வாபஸ் பெற்றிருந்தால் பிரதமர் மோடிக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்காது: விஜயகாந்த்

சென்னை

வேளாண்‌ சட்டங்களைத் தொடக்கத்திலேயே வாபஸ் பெற்றிருந்தால் ‌விவசாயிகளுக்கு முக்கியத்துவம்‌ அளிக்கவில்லை என்ற அவப்பெயர்‌ பிரதமர் மோடிக்கு ஏற்பட்டிருக்காது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான‌ விஜயகாந்த்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''மூன்று வேளாண்‌ சட்டங்களை ரத்து செய்வதாகப் பிரதமர்‌ மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்‌. வேளாண்‌ சட்டங்களைத் திரும்பப் பெற்றால்‌ மட்டுமே போராட்டத்தைத் திரும்பப் பெறுவோம்‌ என்று விவசாயிகள்‌ உறுதியாக நின்றனர்‌. கடந்த ஓராண்டு காலமாகக் கடும்‌ குளிர்‌, மழை, வெயில்‌ என்று பாராமல்‌ போராட்டம்‌ நடத்திய ஒட்டுமொத்த விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்‌.

போராட்டத்தில்‌ உயிரிழந்த விவசாயிகளுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்‌. வேளாண்‌ சட்டங்களைத் தொடக்கத்திலேயே மத்திய அரசு திரும்பப்‌ பெற்றிருந்தால்‌ இத்தனை உயிரிழப்புகள்‌ நேரிட்டிருக்காது. விவசாயிகள்‌, அவர்களது குடும்பங்களின்‌ வாழ்வாதாரமும்‌ பாதிக்கப்பட்டிருக்காது. மேலும்‌ விவசாயிகளுக்கு முக்கியத்துவம்‌ அளிக்கவில்லை என்ற அவப்பெயரும்‌ பிரதமர்‌ மோடிக்கு ஏற்பட்டிருக்காது. இது காலதாமதமான அறிவிப்பு என்றாலும்‌ ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும்‌ மக்களுக்கும்‌ மகிழ்ச்சியான செய்தியாகும்‌.

அதேவேளையில்‌ வேளாண்‌ சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில்‌ ஈடுபட்டவர்கள்‌ மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌.

மேலும்‌, வேளாண்‌ சட்டங்களுக்கு எதிராகப்‌ போராட்டங்களில்‌ ஈடுபட்டு உயிரிழந்த விவசாயிகளின்‌ குடும்பங்களுக்கு நிவாரணமும்‌ வழங்க வேண்டும்‌. விவசாயிகளையும்‌ மக்களையும்‌ வஞ்சிக்கும்‌ எந்த ஒரு புதிய சட்டத்தையும்‌, திட்டங்களையும் எதிர்காலத்தில்‌ மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது''.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x