Published : 19 Nov 2021 04:16 PM
Last Updated : 19 Nov 2021 04:16 PM

மோடியின் நாடகத்தைக் கண்டு விவசாயிகள் ஏமாந்துவிடக் கூடாது: திருமாவளவன்

சென்னை

விவசாயிகள் மோடியின் இந்த நாடகத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மோடி அரசு மூன்று வேளாண் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருப்பது விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய விவசாயிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் இதர ஜனநாயக சக்திகளும் பாராட்டுக்குரியவர்கள்.

மோடி அரசு கொண்டுவந்த வேளாண் விரோத சட்டங்கள் மூன்றையும் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக எதிர்த்துப் போராடி வந்தனர். அவர்களை திசை திருப்புவதற்கு மோடி அரசு பல தந்திரங்களைக் கையாண்டு பார்த்தது. உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டங்களைத் தற்காலிகமாகக் கிடப்பில் போட்டுப் பார்த்தது. அதற்கு விவசாயிகள் ஏமாறவில்லை. போராட்டங்களை நிறுத்தவில்லை. அதன்பிறகு வன்முறையைப் பயன்படுத்தி இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று முயன்றது. அதனுடைய வெளிப்பாடுதான் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த கொடூரமாகும்.

அதன் பிறகும் கூட விவசாயிகள் அஞ்சவில்லை. அதன் பின்னர் தங்களுடைய வழக்கமான பாணியில் போராடும் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும், தேசவிரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்து பார்த்தது. அதுவும் மக்களிடம் எடுபடவில்லை. அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் படுதோல்வி அடைந்த காரணத்தாலும் பஞ்சாப்பிலும் உத்தரப் பிரதேசத்திலும் அடுத்து நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி உறுதி என்பது தெரிந்ததாலும் இப்போது மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

இது விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிதான். என்றாலும் மோடியின் தந்திரத்துக்கு நாம் பலியாகிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடி அரசு இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது விவசாயிகளின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அல்ல, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அது ஆடும் நாடகம்தான் இது. எனவே, விவசாயிகள் மோடியின் இந்த நாடகத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது.

2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமே விவசாயிகள் மீதுதான் முதல் தாக்குதலை மோடி அரசு தொடுத்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது இயற்றப்பட்ட 'நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை' நீர்த்துப் போகச் செய்வதற்கு அதில் 15 திருத்தங்களை மோடி அரசு கொண்டுவந்தது. அந்த சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றினாலும் மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை.

மூன்று முறை அவசரச் சட்டமாக அதைப் பிறப்பித்த மோடி அரசு வேறு வழியில்லாமல் 2015ஆம் ஆண்டில் அந்தச் சட்டத் திருத்த மசோதா காலாவதியாக விட்டது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்துவிட்டது. அதைப் போலவே பாஜகவின் பதிலியாக மாறிவிட்ட அதிமுகவும் அந்தச் சட்டத் திருத்தங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றியது. அதன் அடிப்படையில்தான் சேலம் எட்டு வழிச்சாலை நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையை பாஜக முகவர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். இவற்றை நாம் மறந்துவிடக் கூடாது.

அப்போது செய்தது போலவே இப்போதும் இந்த மூன்று வேளாண் விரோத சட்டங்களை பாஜக ஆளும் மாநில அரசுகள் சட்டமாக்க முடியும். அதுபோன்ற தந்திரத்தை பாஜக செய்யாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே நாம் தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிப்பதன் மூலமே இந்த நாட்டை மக்கள் விரோத, பிரிவினைவாத சனாதன சக்திகளிடமிருந்து காப்பாற்ற முடியும். எனவே விவசாயிகளும், ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்துவதற்கு உறுதியேற்போம்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x