150-க்கும் மேற்பட்டோரை இழந்தோம்; உழவர்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி- ராமதாஸ்

150-க்கும் மேற்பட்டோரை இழந்தோம்; உழவர்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி- ராமதாஸ்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்த உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி இது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். அவர் கூறுகையில் "மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு, களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று பேசினார்.

இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

''வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் ஓராண்டாக கடுங்குளிர் உள்ளிட்ட கொடுமைகளை அனுபவித்துப் போராடினார்கள்; 150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தனர். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்துள்ளனர். இது உழவர்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி.

உழவர்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். இதைக் கருத்தில் கொண்டு கோதாவரி - காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்புகள், பாசனத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விளைபொருள் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in