Published : 19 Nov 2021 01:31 PM
Last Updated : 19 Nov 2021 01:31 PM
வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் தொடர் கனமழை பொழிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தமிழகப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரும் புதுச்சேரிக்கு அதிக அளவில் வருகிறது. ஏற்கெனவே புதுச்சேரியில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் வீடூர் அணை திறக்கப்பட்டுள்ளதாலும், புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாகவும், சங்கராபரணி ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. இதனால் இதன் குறுக்கே அமைந்துள்ள புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப்பாலத்தைத் தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாலத்தின் வழியாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து வருவோர் வில்லியனூர்-திருக்காஞ்சி பாலம் வழியாகப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
கிராமங்களில் புகுந்த வெள்ள நீர், சங்கராபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கால் வெள்ள நீர் ஆரியப்பாளையம் பாலத்தைத் தண்ணீர் தொட்டுச் செல்கிறது.
ஆரியபாளையம் உள்பட பத்து கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. குறிப்பாக ஆரியப்பாளையம், ஆரியபாளையம்பேட், கணுவாபேட், புதுநகர் உள்ளிட்ட கிராமங்களில் நீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு உள்ள அரசுப் பள்ளியில் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் வடியும் வரை யாரும் வீட்டுக்கு செல்லக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை: இரண்டு கிராமங்கள் துண்டிப்பு
வீடூர் அணை திறப்பால் வெள்ள நீர் சங்கராபரணி ஆற்றில் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றுநீர் கரைகளைத் தாண்டி ஊருக்குள் செல்கிறது. இதனால் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கென்னடிக்குப்பம்- செல்லிப்பட்டு சாலை வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. சாலையைத் துண்டித்துக் கொண்டுவந்த வெள்ளம் விவசாய நிலம் மற்றும் செங்கல் சூளைகளைச் சூழ்ந்துள்ளது.
செல்லிப்பட்டு கிராமத்தில் மட்டும் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. செல்லிப்பட்டு மற்றும் கண்டிகுப்பம் கிராமம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் வடிவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேலாகும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT