Published : 19 Nov 2021 01:16 PM
Last Updated : 19 Nov 2021 01:16 PM
உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களைப் பிரதமர் வாபஸ் பெற்றுள்ளார் என நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று முன்தினம் நான்கு மணி நேரம் பெய்த கனமழையால் உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா உட்பட அனைத்து கிராமப் பகுதிகளிலும், கோத்தகிரி, குந்தா, கூடலூர், குன்னூர் உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. உதகையில் 4 மணி நேரத்தில் 98 மி.மீ. மழை பதிவானது.
இதனால், உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான காந்தல், க்ரின்பீல்ட்ஸ் உட்பட்ட பல பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும், நகராட்சி சந்தைக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. காந்தல் புதுநகர், வண்டிச்சோலையில் குடியிருப்புப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பலர் சிக்கிக்கொண்டனர். நகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டுப் பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்தனர். தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
பேருந்து நிலையச் சாலையில் ரயில்வே பாலம் பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. தண்ணீரில் சிக்கிய வாகனங்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை மற்றும் இடி, மின்னலால் நகரின் பெரும்பாலான பகுதகிளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட காந்தல், பிங்கர்போஸ்ட், விசி காலனி, எல்லநள்ளி மற்றும் குன்னூர் பகுதிகளை நீலகிரி எம்.பி. ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
உதகை வி.சி.காலனி பகுதியில் அங்கன்வாடி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை எம்.பி. மற்றும் அமைச்சர் ஆகிய இருவரும் சந்தித்தனர். அவர்களுக்கு வேட்டி, சேலை, கம்பளி, அரிசி மற்றும் பணம் கொடுத்து உதவினர். மேலும், அப்பகுதியில் இடியும் நிலையில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர். பின்னர் உதகை படகு இல்லம் சாலையில் விழுந்த தடுப்புச் சுவரை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் எம்.பி. ஆ.ராசா கூறும்போது, ''முதல்வர் அறிவுரைப்படி நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்தோம். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
விரைவில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலைக் கருத்தில் கொண்டு பிரதமர் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார்'' என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் (பொ) கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை வட்டாட்சியர் தினேஷ், நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...