Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM

பிரபல எழுத்தாளர் கோவி. மணிசேகரன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

சென்னை

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான கோவி. மணிசேகரன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.

வேலூர் மாவட்டம் சல்லிவன்பேட்டையில் 1927-ம் ஆண்டு மே 2-ம் தேதி கோவி.மணிசேகரன் பிறந்தார். தனது 16 வயது முதல் சுமார் 76 ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றி வந்த கோவி. மணிசேகரன் சென்னைகே.கே.நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக தனது 95-ம் வயதில் அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.

கோவி.மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடகநூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள் மற்றும்ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். குறிப்பாக அவர் எழுதிய ‘குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூலுக்கு 1992-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

கோவி.மணிசேகரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள், இலக்கியப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சாகித்ய அகாடமி விருது பெற்ற மணிசேகரன், கே.பாலசந்தரிடம் 21ஆண்டுகளுக்கு மேலாக உதவி இயக்குநராக பணியாற்றி, 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் எழுத்து உலகத்துக்குப் பெருமையும் சேர்த்தவர். வரலாற்றுப் புதினமான குற்றாலக்குறிஞ்சியும், தென்னங்கீற்று திரைப்படமும் அவர் பெயரை இன்னும்சொல்லுகின்றன. தமிழ் எழுத்துலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்து தவிக்கிறது.” என்று தெரி வித்துள்ளார்.

கோவி.மணிசேகரனின் இறுதிச் சடங்கு சென்னை ஏவிஎம் ஸ்டுடியோ அருகில் உள்ள மின் மயானத்தில் இன்று மதியம் நடைபெற உள்ளது. அவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, 5 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x