Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM
புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கேட்டு 12 தடவைக்கு மேல் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை நடவடிக்கையில்லை. இது புதுச்சேரி ஆளுகையை நாளுக்கு நாள் சிக்கலுக்கு இட்டுச் செல்கிறது.
புதுச்சேரியில் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளை விட மத்திய அரசு நியமிக்கும் துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம். 25-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்தும், அவர்களுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லை. தமிழ் தவிர்த்து இதர மொழி பேசும் அதிகாரிகள் தலைமைச்செயலகம் தொடங்கி ஜிப்மர் மருத்துவமனை வரை இருக்கின்றனர்.
விலைவாசி உயர்வு தமிழகத்தை விட அதிகரித்தே வருகிறது. நிதி பற்றாக்குறை, தொழிற்சாலைகள் மூடல் என பல்வேறு பிரச்சினைகளில் அரசுடன், மக்களும் சிக்கி தவிக்கின்றனர். மாநில அந்தஸ்தை வலியுறுத்தி தனிக்கட்சியைத் தொடங்கிய ரங்கசாமி தற்போது மீண்டும் முதல்வராகி உள்ளார்.
புதுச்சேரியில் மாநில அந்தஸ்தை ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கி எதிர்க்கட்சியான திமுக வரை அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் தரப்பில் கூறும்போது, "புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 70% மானியமாக நிதி வழங்கி வந்தனர். அதைப் படிப்படியாக குறைத்து 25 சதவீதத்தில் கொண்டு வந்துவிட்டனர். அனைத்து மாநிலங்களும் 14-வது நிதி கமிஷன் பரிந்துரைப்படி 42% நிதி ஆதாரத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுகின்றன.
புதுச்சேரி யூனியன் ஆட்சிப் பரப்பை மத்திய நிதி கமிஷன் வரம்பில் கொண்டுவரவில்லை. நிதி கமிஷனிலும் இல்லாமலும், மானியங்களும் இல்லாமல் புதுச்சேரி தவிக்கிறது. அதே நேரத்தில் சரக்கு மற்றும் சேவை வரியில் மாநிலங்களுக்கு இணையாக கருதி, புதுச்சேரிக்கு மத்திய அரசுநிதியை பிரித்தே தருகிறது. இச்சூழலில் புதுச்சேரியை மாநிலமாக மாற்றுவது அவசியமானதாகும். சுயமாக சட்டம் இயற்றமுடியாத நிலையில் உள்ள சட்டப்பேரவைஇது. டெல்லி ஒப்புதலுடன்தான் நிறைவேற்றும் சூழல் உள்ளது" என்றனர்
சில எதிர்ப்புக் குரல்கள்
கட்சிகள் வலியுறுத்தும் மாநில அந்தஸ்துக்கு எதிராகவும் புதுச்சேரியில் குரல் ஒலிக்கிறது. "புதுச்சேரியில் கடந்த 2007-08ல் மக்கள் கருத்து அறியாமல் பொதுக்கணக்கு நிதியை அரசு தொடங்கியது. அதனால்தான் மத்திய அரசின் நிதி உதவி 76 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்தது. நிதி பற்றாக்குறை என்பதே செயற்கை. நல்ல நிர்வாகமே நிதி பற்றாக்குறைக்கு தீர்வு.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தற்போது வழங்கப்படும் மத்திய அரசின் நிதி மேலும் குறையும். மக்கள் நலத்திட்டம் குறையும். மக்கள் மீது வரிச்சுமை கூடும். மாநில அந்தஸ்து கிடைத்தால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 40 வரை உயர்த்த முடியும். அமைச்சர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். ஐஏஎஸ் அதிகாரிகளின் கட்டுப்பாடு தங்களுக்குகீழ் வந்துவிடும் என்பதாலேயே அரசியல் கட்சியினர் அதை ஆதரிக்கின்றனர்" என்கின்றனர் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள்.
"தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் ஒரே கண்ணோட்டத்தில்தான் புதுச்சேரியை வைத்துள்ளன. என்.ஆர்.காங். - பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைத்த போதிலும் முதல்வர் ரங்கசாமி இதுவரை மரியாதை நிமித்தமாக டெல்லி சென்று, பிரதமரை சந்திக்கவே இல்லை. மாநில அந்தஸ்து தொடங்கி பல முக்கிய விஷயங்களுக்கு அவர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தாலே தீர்வு கண்டு விட முடியும். ஆனால், முதல்வர் தொடர் மவுனத்தில் இருக்கிறார்.
தற்போது தென்னிந்திய முதல்வர் மாநாட்டில், ‘மாநில அந்தஸ்து தேவை’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்பாக முதல்வர் ரங்கசாமி பேசியுள்ளார்.
அண்மையில், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா?’ என்று மக்களவையில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியதற்கு, ‘இல்லை’ என்றே மத்திய அரசு பதில் அளித்துள்ளது" என்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT