Published : 18 Nov 2021 06:20 PM
Last Updated : 18 Nov 2021 06:20 PM
தென் மாவட்டத்திற்கான புதிய ரயில் சேவை, முக்கிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை ஆய்வுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக எம்.பி.க்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள், பிற அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய ரயில், சேவை நீட்டிப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கான ஆலோசனைகளைப் பெறுவது வழக்கம்.
இதன்படி, ரயில்வே நிர்வாகத்துடன் தென் மாவட்ட எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) கோபிநாத் மல்லையா தலைமை வகித்தார். ரயில்வே நிர்வாகம் சார்பில், முதன்மைப் போக்குவரத்து மேலாளர் நீனு இட்டியரா, முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, ரயில்வே கட்டுமான நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் வைகோ, சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), கனிமொழி (தூத்துக்குடி), எஸ்.திருநாவுக்கரசர் (திருச்சி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி ( ராமநாதபுரம்) சுரேஷ், எஸ்.ஞானதிரவியம், தனுஷ் குமார், பி. வேலுச்சாமி, முகமது அப்துல்லா, ஏ.விஜயகுமார், சோமபிரசாத் ஆகிய 17 எம்.பி.க்கள் வளர்ச்சித் திட்டங்கள், கோரிக்கைகள் பற்றி தங்களது ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பின் எம்.பி.க்கள் கூறியது பின்வருமாறு:
வைகோ எம்.பி. : ''தென் மாவட்டம் மற்றும் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்கள், கோரிக்கைகள் அடங்கிய 5 பக்க அறிக்கை அளித்துள்ளேன். இவற்றிலுள்ள முக்கியக் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன'' என்று தெரிவித்தார்.
கனிமொழி எம்.பி. : ''தூத்துக்குடியில் இருந்து நெல்லை, கோவை, சென்னைக்குப் புதிய ரயில் சேவைகள் தொடங்க வேண்டும். தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகப் புதிய ரயில் பாதை சர்வே எடுத்தது கிடப்பிலுள்ளது. தென் மாவட்ட ரயில்களில் பெட்டிகள் போதிய பராமரிப்பு இன்றி பழைய ரயில் கோச்களைப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பெட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். புதிய ரயில் பாதை, சேவைகள் குறித்து வலியுறுத்தியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
சு.வெங்கடேசன் எம்.பி.: ''தேஜஸ் ரயில் சென்னை செல்லும்போதும், மதுரை திரும்பும்போதும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். மதுரை - திருவனந்தபுரம் ஒட்டன்சத்திரம் வழியாகச் செல்லும் அமிர்தா விரைவு ரயிலை காய்கறி, பழ விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை- போடி- தேனி- வழியாக சென்னை செல்லும் வகையில் ரயில்வே தடம் நீட்டிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். மதுரை - மேலூர் - காரைக்குடி வழித்தடத்தில் புதிய ரயில் திட்டம், காரைக்குடி - திண்டுக்கல் - நத்தம் வழியிலான புதிய வழித்தட்டம் உட்பட மதுரை மக்களுக்கு அவசியமான திட்டங்கள் தொடங்க வலியுறுத்தியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
திருநாவுக்கரசர் எம்.பி. : ''மதுரை ரயில் நிலையத்தில் முன்கூட்டியே நிர்ணயித்து கால் டாக்ஸ் வசதி, ரயில்கள் வரும்போது, 6 நிமிடம் மட்டுமே கார்கள் நிற்க பார்க்கிங்கில் அனுமதிக்கப்படுகிறது. 10 நிமிடமாக அதிகரிக்க வேண்டும். காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப் பூண்டி, மாயவரம் இடையே 2 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கவில்லை. மீண்டும் இந்த வழியில் ரயில் சேவை தேவை. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டுமே 6 எம்.பி.க்கள் உள்ளோம். வடமாநில ரயில்களுக்கு இப்பகுதியில் அதிக ரயில்களை இயக்க வேண்டும். தமிழகத்தில் கரோனாவுக்கு முன்பாக 700க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது எல்லா ரயில்களையும் இயக்க வலியுறுத்தியுள்ளோம். பிளாட்பார டிக்கெட் ரூ.50 லிருந்து ரூ.10 ஆகக் குறைக்க கோரிக்கை வைத்தேன்'' எனத் தெரிவித்தார்.
ப.ரவீந்திரநாத் எம்.பி. : ''தேனி- மதுரை இடையேயான அகல ரயில் பாதை சேவையை உடனே தொடங்க வேண்டும். தேனி முதல் போடி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரயில் எண் 20601/20602 , சென்னை சென்ட்ரல்- மதுரை - சென்னை சென்ட்ரல் வாரத்திற்கு மூன்று முறை இயங்கும் குளிர்சாதன விரைவு ரயிலை போடி வரை இயக்க வேண்டும். திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் பகுதி வரை அகல ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருப்பதி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி.: ''சிவகங்கை தொகுதியில் நாட்டரசன்கோட்டை, செட்டிநாடு ஆகிய ரயில்வே நிறுத்தங்களில் ரயில் நிறுத்தம் கேட்டுள்ளோம். கூட்டத்தில் பெரும்பலான கோரிக்கையை நிராகரித்தனர். எந்தக் கோரிக்கை விடுத்தாலும் அதிகாரம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இ-க்யூ நடைமுறையை ஃபேக்ஸில் அனுப்பவதிற்கு பதில் இ-மெயிலில் பெறலாம் என்ற கோரிக்கையைத்தான் ஏற்றுள்ளனர். ரயில்களில் வடநாட்டு உணவுகளே வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் கரோனா காலகட்டம் முடியும்வரை இந்த உணவுதான் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்'' என்று கூறினார்.
ராமநாதபுரம் நவாஸ்கனி, விருதுநகர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தென்மாவட்ட எம்.பி.க்களும் முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT