Published : 18 Nov 2021 04:20 PM
Last Updated : 18 Nov 2021 04:20 PM
இலங்கை ரோந்துக் கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவரின் மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை, வரும் 24-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்.ராஜ்கிரண் (30), எஸ்.சுகந்தன் (30), ஏ.சேவியர் (32). இவர்கள் மூவரும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்துப் படகு மூலம் மீனவர்கள் படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர்.
இதில், மீனவர்களின் படகு கடலில் மூழ்கியதோடு மீனவர் ராஜ்கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உயர் தப்பிய மீனவர்கள் சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து பின்னர் விடுவித்தனர்.
இதையடுத்து, அக்.23-ம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரணின் உடல் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் காயம் இருப்பதால் இலங்கை கடற்படை அவரைக் கொலை செய்திருக்கலாம் எனவும், எனவே அவரது உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நவ.3-ம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம், ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பிருந்தா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வட்டாட்சியர் முன்னிலையில் மறு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதனிடையே, நீதிபதி உத்தரவின் பேரில், மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட ராஜ்கிரணின் சடலத்தைத் தடயவியல் துறை மருத்துவர்கள் தமிழ் மணி, சரவணன் ஆகியோர் மறு பிரேதப் பரிசோதனை செய்தனர்.
பின்னர், கூடுதல் சோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான அறிக்கை வரும் 24-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT