Published : 18 Nov 2021 02:50 PM
Last Updated : 18 Nov 2021 02:50 PM
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெய்வேலி அருகே பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. மாணவர்கள் இல்லாததால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குமராட்சி, விருத்தாசலம், வடலூர், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று ( நவ.17) நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் மழை தண்ணீர் ஆறு போல ஓடியது. இன்று (நவ.18) காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லேசான காற்று வீசியதால் சிதம்பரம் எஸ்.ஆர்.நகர், குமராட்சி அருகே உள்ள ஒட்டரப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளன. மாவட்டம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நெய்வேலி அருகே உள்ள வானதிராயபுரம் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இப்பள்ளிக் கட்டிடம் 1996-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.
இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நெய்வேலி தெர்மல் போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இன்றைய மழையளவு
தொழுதூரில் 67 மி.மீ., மேமாத்தூரில் 60 மி.மீ., கடலூரில் 48.6 மி.மீ., வேப்பூரில் 45 மி.மீ., பரங்கிப்பேட்டையில் 42.8 மி.மீ., விருத்தாசலத்தில் 41 மி.மீ., காட்டுமன்னார்கோவிலில் 40.3 மி.மீ., சிதம்பரத்தில் 34.6 மி.மீ., அண்ணாமலை நகரில் 30.8 மி.மீ., ஸ்ரீமுஷ்ணத்தில் 29.3 மி.மீ., புவனகிரியில் 26 மி.மீ., பண்ருட்டியில் 20 மி.மீ. மழை பெய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT