Published : 18 Nov 2021 01:28 PM
Last Updated : 18 Nov 2021 01:28 PM
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் முறையில் தேர்வை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டிருந்தன. சுமார் 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தன. பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
கரோனா நோய்த் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் வசிக்கும் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையைக் கட்டாயமாக்கியது. இதன்படி தமிழ்நாட்டிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாகத் தெரிவித்த மாநில அரசு, படிப்படியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கல்லூரிகளைத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்திட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, இந்த அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைப் படிப்படியாகத் திறந்து வருகிறது.
இச்சூழ்நிலையில் கல்லூரிகள் திறந்து சுமார் இரண்டரை மாதங்களே ஆனதாலும், முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பண்டிகைக் காலம், பருவமழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதாலும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே, செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த செமஸ்டருக்கான பாடத்திட்டம் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற பாடத்திட்டம் கல்லூரிப் பேராசிரியர்களுக்குக் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும், மேலும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
கல்லூரிகளில் நடைபெற உள்ள வகுப்புகளுக்கு மாணவர்கள் நேரடியாக வரக்கூடிய சூழ்நிலை இருந்தாலும், பல மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாத காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடித் தேர்விற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டி, இந்த முறையும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை அரசுக்கு வைத்து, வகுப்பைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
எனவே, அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்றும், அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கு வந்து பாடம் கற்கிறார்களா? என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நேரடித் தேர்வு நடத்தினால்தான் மாணவச் செல்வங்கள் முழுத் திறமையோடு தேர்வை எதிர்கொள்ள முடியும்.
மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு, நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்த வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT