Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
வசதிப் படைத்த பலர் ஏழைகள் வைத்திருக்க வேண்டிய சிவப்பு ரேஷன் அட்டைகளை புதுச்சேரியில் வைத்துள்ளனர். அதே நேரத்தில் ஏழைகள் பலரிடம் மஞ்சள் ரேஷன் அட்டைகள் உள்ளன. இதையெல்லாம் முறைப்படுத்த வீடு வீடாகச் சென்று ரேஷன் கார்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீண்ட காலமாக எனகூறப்பட்டு வரும் நிலையில், அந்த கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
புதுச்சேரியில் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் மக்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3.4 லட்சத்துக்கும் அதிகமான மஞ்சள், சிவப்பு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் வைத்திருக்க வேண்டிய சிவப்பு கார்டுகளை வசதி படைத்த பலர் வைத்திருப்பதாக துறைக்கு புகார்கள் அதிகளவில் சென்றன.
மேலும் மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. குறிப்பாக 1.7 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி களஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.
புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளை கணக்கெடுப்பு நடத்த கடந்த 2020 முதல் இருமுறை அரசு முடிவு எடுத்தது. குடும்பத்திலுள்ள நபர்கள், வீட்டில் எத்தனை தனி சமையலறையுள்ளது, டிவி, ஏசி, ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், டூ வீலர், கார் என பல அம்சங்களை அதில் கணக்கிட தெரிவித்திருந்தனர். ஆனால், கரோனாவால் இந்த கணக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் தருவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் மஞ்சள் அட்டை வைத்துள்ள ஏழைகள் பலரும் ஆதங்கத்தில் உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் வசதிப் படைத்த பலர் சிவப்பு அட்டை வைத்துள்ளனர். அரசு ஊழியர்களில் சிலரிடம் கூட இருக்கிறது. புதுச்சேரியில் கடந்த 2010ம் ஆண்டுக்குப் பிறகு தகுதியான பலர் சிவப்பு அட்டை வேண்டுமென விண்ணப்பித்தும் வழங்கப்படவில்லை.
மேலும், கடந்த பத்தாண்டு காலத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளுக்கும் சிவப்பு ரேஷன் அட்டை மற்றும் உணவு தானியங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு அரசின் கடமையாகும். சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்க கூடியவர்களை முறைப்படுத்துவதற்காக கணக்கெடுப்பு நடத்தாமல் சிவப்பு அட்டைக்கு மட்டும் நிவாரணம் அறிவித்துள்ளது தவறானது" என்று குற்றம் சாட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT