Published : 17 Nov 2021 07:10 PM
Last Updated : 17 Nov 2021 07:10 PM
தமிழக அமைச்சரவைப் பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முதலிடம் வழங்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த வெள்ளையன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது அமைச்சரவைப் பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை 5-வது இடத்தில் இருந்தது. கருணாநிதி முதல்வரானதும் 1969-ல் அமைச்சரவைப் பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை 10-வது இடத்துக்குச் சென்றது. 1971-ல் 3-வது இடத்தில் இருந்தது. தற்போது 34-வது இடத்தில் உள்ளது. இதனால் தமிழக அமைச்சரவைப் பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறையை முதலிடத்திற்குக் கொண்டுவர உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், ''ஒவ்வொரு ஆட்சியிலும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வரிசைப்படியேதான் துறைகள் பட்டியலிடப்படுகின்றன. அகர வரிசைப்படி பட்டியலிட்டால் ஆதிதிராவிடர் நலத்துறைதான் முதலில் வரும். மனுதாரர் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும்'' என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT