Published : 17 Nov 2021 02:19 PM
Last Updated : 17 Nov 2021 02:19 PM
அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (17-11-2021) அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மருத்துவமனை வளாகத்தில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ நிவாரண முகாமைத் தொடங்கி வைத்தார். சித்த மருந்துகள் தயாரிக்கும் இடத்திற்குச் சென்று கபசுரக் குடிநீரைப் பருகி அவற்றை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
''மழை, வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகு வரக்கூடிய நோய்களுக்குத் தமிழ்நாடு முழுவதுமாக 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் டெங்கு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் வழங்கி மருத்துவ சேவை ஆற்ற இருக்கின்றனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 50 வாகனங்கள் மூலம், ஒவ்வொரு வாகனத்திற்கும் 3 மருத்துவர்கள் என 200 வார்டுகளுக்கும் சென்று மழை வெள்ளம், டெங்கு பாதித்த பகுதிகளில் மருத்துவ சேவை செய்ய உள்ளனர். இந்த வாகனங்களில் மூன்று பாத்திரங்களில் 30 லிட்டர் கபசுரக் குடிநீர், 30 லிட்டர் நிலவேம்புக் குடிநீர், மற்றும் மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் தாளிசாதி சூரணம் கேப்சூல், தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பெய்ன் பாம், பிண்டத் தைலம், கற்பூராதி தைலம், மத்தன் தைலம், வங்க விரணக் களிம்பு ஆகிய மருந்துகளைப் பொது மக்களுக்கு வழங்க இருக்கின்றனர்''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT