Published : 17 Nov 2021 11:58 AM
Last Updated : 17 Nov 2021 11:58 AM

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

தமிழர் திருநாளான தைப் பொங்கலை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு (அரிசி அட்டைதாரர்கள்) பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் உட்பட மளிகைப் பொருட்கள் என 20 பொருட்கள் (துணிப்பை உட்பட) அடங்கிய தொகுப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டோக்கன் எப்போது வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த முறை ரூ.2500 ரொக்கப் பணமும், பொங்கலுக்குத் தேவையான பொருட்களும் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியிருந்த நிலையில் அதனைக் கணக்கிட்டே ரொக்கப் பணம் வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x