Published : 17 Nov 2021 10:09 AM
Last Updated : 17 Nov 2021 10:09 AM
கரூரில் போக்சோ வழக்கில் தலைமறைவான மருத்துவரை மாவட்ட மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூரைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஜெ.ரஜினிகாந்த் (55). இவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு மேலாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (55). அதே மருத்துமனையில் பெண் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி அன்று தீபாவளி போனஸ் மற்றும் புத்தாடையைப் பெற்றுக்கொள்ள அந்தப் பெண்ணின் 17 வயது மகளுக்கு மருத்துவர் ரஜினி வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி அழைப்பு விடுத்ததாகவும், மேலாளர் சரவணனும் அச்சிறுமியை போனில் அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதற்கு மருத்துவனை மேலாளர் சரவணனும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து அச்சிறுமி தாயிடம் தெரிவித்ததை அடுத்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய இருவர் மீது போக்சோ உள்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், மருத்துவமனை மேலாளர் சரவணனை கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவான டாக்டர் ரஜினிகாந்த்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவ்வழியாக காரில் வந்த டாக்டர் ரஜினிகாந்த்தை அதிரடியாக கைது செய்து கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT