Published : 17 Nov 2021 09:27 AM
Last Updated : 17 Nov 2021 09:27 AM
நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தை சூர்யா தயாரித்து, நடித்துள்ளார்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர்காடு சாலையில் அமைந்துள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில் பாதுகாப்பு ஏதும் கோரப்படாத நிலையில் உளவுத்துறை அறிக்கையின்படி இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி, நடிகர் சூர்யாவின் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் ஆயுதப் படையைச் சேர்ந்த 5 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா, ஜோதிகா மீது புகார்:
இதற்கிடையில், 'ஜெய்பீம்' திரைப்படத்துக்கு எதிராக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் மீது வன்னியர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் பாமகவினர் அளித்த புகார் மனுவில், ‘‘சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த 1995-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை தயாரித்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT